வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கும், கூகி உள்ளிட்ட பழங்குடி சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் வன்முறை சம்பவங்களால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கு அமைதியை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலே வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: ஜனநாயக அமைப்பில் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு இடமில்லை. தற்போதைய நெருக்கடியை மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் சமாளித்து, அமைதியை நிலைநாட்ட பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும். குழப்பமான வன்முறை சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், நிரந்தர அமைதியை உறுதி செய்யவும், மணிப்பூர் போலீசார், அரசியல் குழுக்கள், பொதுமக்கள் மற்றும் மத்திய அமைப்புகள் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.