காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை தேவை

இந்து முன்னணி நிர்வாகிகளை தாக்கிய தென்காசி மாவட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கரன்கோவில் கோமதியம்மன் கோயில் அருகே திராவிடர் கழக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் சமூக சேவகர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அங்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்துகொண்ட கூட்டம் திட்டமிட்டபடி நடந்துள்ளது. கோயில் அருகே அனுமதி மறுத்து, வேறு இடத்தில் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கட்டும் என்று கூறி அமைதியாக போராடிய இந்து முன்னணியினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதே தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த வாரம் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்த இருந்தனர். ஆனால், பள்ளி இருக்கும் இடம், மக்கள் கூடும் இடம் என்று கூறிய காவல் துறை, அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், மத உணர்வுகளை புண்படுத்தி, மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு கோயில் அருகிலேயே பாதுகாப்போடு அனுமதி வழங்கியிருப்பது மத விரோத செயலாகும். இந்து முன்னணி நிர்வாகிகளிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட துணை கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தென்காசி மாவட்ட காவல் துறைக்கு தமிழக முதல்வர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.