எச்சரிகையையடுத்து நடவடிக்கை

கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்ட 2018ல் 308 கோடி ரூபாய் ஒதுக்கியும், ஒரே ஒரு ஸ்ட்ராங் ரூம் மட்டும் கட்டப்பட்டுள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சில நாட்களுக்கு முன் தமிழக அரசையும் ஹிந்து சமய அறநிலையத் துறையையும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையையடுத்து ஹிந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் உடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள்உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய சேகர்பாபு, “கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளை பாதுகாக்கும் வகையில் ரூ.156.67 கோடியில் 1,835 பாதுகாப்பு அறைகள் கட்டப்படும். இதில், 1,200 பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்கான பணிகள் அடுத்த மாதத்துக்குள் தொடங்கப்படும். இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என கூறினார்.