மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியான 10 இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் தலா இரண்டு வேட்பாளர்களையும், பாஜக 5 வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்தன. இதில் பா.ஜ.கவால் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையிலும் கூடுதலாக ஒரு வேட்பாளரை களத்தில் இறக்கியது. பா.ஜ.கவின் 5வது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 24 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே தேவையாக இருந்தது. இத்தேர்தலில் சுயேச்சைகள், சிறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 29 பேர் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சிவசேனா காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.கவும் சுயேச்சைகளை தக்கவைத்துக்கொள்ள போராடின. பா.ஜ.கவின் தேவேந்திர பட்நவிஸ் இதில் முன்னின்று அற்புதமாக செயல்பட்டார். இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக புனேயில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர். அமெரிக்கா சென்றிருந்த பகுஜன் விகாஸ் அகாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏவையும் வாக்களிக்க பா.ஜ.க அழைத்திருந்தது. சிறையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை அணுகி வாக்களிக்க அனுமதி பெற முயன்று தோல்வி அடைந்தனர். இத்தேர்தலில் சிவசேனா தங்களது வேட்பாளரை வெற்றி பெற வைத்துவிட்டது. தேசியவாத காங்கிரசும் தன்னுடைய எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை விட 4 வாக்குகளை அதிகம் பெற்று தங்கள் இரு வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துவிட்டது. ஆனால், காங்கிரசின் ஒரு வேட்பாளர் மட்டுமே இத்தேர்தலில் வெற்றி பெற்றார். சுயேட்சை, சிறு கட்சிகளின் எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவைக்க இந்த இரு கூட்டணி கட்சிகளும் முயலாமல் காங்கிரசை நட்டாற்றில் விட்டனர். காங்கிரஸ் தலைவர்களும் தங்களது மெத்தனத்தால் கோட்டை விட்டனர். காங்கிரசின் 3 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தனர். தேவேந்திர பட்நவிஸ் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் தங்கள் கட்சி நிறுத்தியிருந்த 3 வேட்பாளர்களில் மூவரையும் வெற்றி பெறவைத்தார். இப்படி ஓரணியாக நின்று சிறப்பாக செயல்பட்டு முப்பெரும் எதிரிகளை வீழ்த்தி சாதனை படைத்த பா.ஜ.க, 2024 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும், இத்தேர்தல் முடிவு அடுத்த சில மாதங்களில் நடக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.