கொரோனா பிரச்சனைகள் இருந்தபோதிலும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் ரூ. 95,741.74 கோடியை 2020-21ம் ஆண்டுக்கான வருவாயாக ஈட்டி புதிய சாதனை புரிந்துள்ளது. இது கடந்த 2019-20ல் ரூ. 88,887 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி 7.71 சதவீதம் அதிகம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் காதி பொருட்களின் உற்பத்தி இரு மடங்கிற்கும் மேலாகவும் விற்பனை மூன்று மடங்கும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டின் வளர்ச்சியும் சராசரியாக 19.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், இது 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி வெறும் 6.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. காதி தொழிற்துறை புத்துயிர் பெற மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும் பிரதமர் மோடியின் ‘மனத்தின் குரல்’ நிகழ்ச்சியில் காதி பொருட்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த அவர் விடுத்த தொடர் வேண்டுகோளின் விளைவாகவே இது சாத்தியமாகியுள்ளது.