ஆடி பண்டிகை எளிய படையல்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்துக்களுக்கும் ஆடி மாதம் முழுவதும் பண்டிகைகள்தான். இந்த மாதத்தில் ஹிந்து வீடுகளில் சமைத்து படைப்பது மட்டுமல்ல, வீட்டின் அருகே வரும் வழிபோக்கர்களையும் கூழ் அருந்தச் செய்து மகிழ்வது தொன்று தொட்ட வழக்கம். பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்லும் இன்றைய காலகட்டத்தில் சமையல் வேலைகளை எளிமையாக முடிக்க சில உணவு குறிப்புகளை வாசகர்களுக்குத் தருகிறோம்.

ஆடிக்கூழ் (கம்பு/ கேழ்வரகு)
கம்பு அல்லது கேழ்வரகை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி மிக்ஸியில் தோசை மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும். அரைத்த மாவை உப்பு, கடுகு, பெருங்காயம், (வெங்காயம்) சேர்த்து வெந்நீரில் இந்த மாவு கரைசலை கலந்து கூழாகக் காய்ச்சி அம்பாளுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.

ஆடிப்புட்டு
முதல் நாள் இரவே அரிசியை அரைத்து ஊறவைத்து உலர்த்தி வைத்துக்கொண்டு, மறுநாள் காலை பச்சரிசியை மிக்ஸியில் நைஸாக ஏலக்காய் சேர்த்து அரைத்து, ஆவியில் வேக விடவும். சிறிது மஞ்சள்தூள் கலந்து நன்கு வெந்ததும், பாகு வைக்க அவகாசம் இல்லாதவர்கள், மாவை உதிர்த்து அதோடு தேவையான நாட்டு சர்க்கரையை கலந்து, நெய்யில் ஏலம், திராட்சை, முந்திரி தாளித்து நைவேத்தியம் செய்வார்கள்.

மாவிளக்கு
வீடுகளில் மாவிளக்கு ஏற்றி குல தெய்வத்துக்கு படையல் செய்யும் முறை தமிழ் ஹிந்துக்களுக்கே உரியது. அரிசியில் (பச்சரிசி) தண்ணீர் தெளித்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு மிக்ஸியில் பச்சரிசியுடன் ஏலக்காய் சேர்த்து மாவாக அரைக்கவும். அரைத்த அரிசி மாவோடு தேவையான அளவு நாட்டுசர்க்கரை, தேன் கலந்து, உருண்டையாக உருட்டி மாவி ளக்காக ஏற்றி வழிபடலாம்.

அரிசி மாவு பிடி கொழுக்கட்டை

வீட்டில் தயாரிக்க நேரம் இல்லாதவர்கள் ஈர அரிசி மாவை கடைகளில் வாங்கி வாணலியில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைக்க வைத்து உப்பு சேர்க்கவும்.
ஒரு கப் மாவிற்கு இரண்டு டம்ளர் அல்லது இரண்டு கப் தண்ணீர் என்ற விகிதத்தில், தண்ணீர் கொதித்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டி கை விடாமல் கிளறி சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும். மாவு நன்கு ஆறியதும், கைகளில் நெய் சிறிது தடவிக்கொண்டு கொழுக் கட்டையாக பிடித்து ஆவியில் வைத்து எடுக்கவும்.
காலையில் அல்லது மாலையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வளையல்கள்,தாம்பூலம், புஷ்பம் ஆகிய வற்றுடன் மேலே சொன்ன ஏதாவது ஒரு பிரசாதத்தை நைவேத்தியமாகச் செய்து சுமங்கலி பெண்களுக்கு வைத்து கொடுப்பார்கள்.

-விருபாக்ஷா சங்கீதா