உத்தர பிரதேசம், வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப், மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட களஆய்வில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்தது. இதனால், ஒசுகானாவை சீல் வைக்க வாரணாசி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991படி மசூதி மீது வழக்கு தொடர முடியுமா என்பதில் ஹிந்து தரப்பின் வாதமும் முஸ்லிம்கள் தரப்பின் வாதமும் தற்போது நடந்து முடிந்துள்ளது. இவ்வழக்கில் ஹிந்து தரப்பில் 5 மனுதாரர்களில் ராக்கி சிங்கின் வழக்கறிஞரான விஷ்ணு ஜெயின் மீது நீதிபதியிடம் சில ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‘அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ள விஷ்ணுஜெயின், அரசுக்கு எதிரான வழக்கில் ஆஜராகி உள்ளார். இவர், டெல்லியின் முஸ்லிம் அமைப்பான இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகவும் உள்ளார். இம்மையத்தின் காப்பாளர்களில் ஒருவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளார். எனவே, விஷ்ணு ஜெயின் ஹிந்து தரப்புக்கு எதிராக செயல்படும் வாய்ப்புகளும் அதன் காரணமாக ஞானவாபி மீதான வழக்கு முஸ்லிம்களுக்கு சாதகமாக முடியும் வாய்ப்புகளும் உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கின் 4 இந்து பெண்களும் ஒன்றிணைந்து, ‘ஆதி மகாதேவ் காசி தர்மாலாயா முக்தி நியாஸ்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்ரை அமைத்துள்ளனர். இதன் சார்பில் திரட்டப்படும் நிதியைகொண்டு ஞானவாபி வழக்குகளை அறக்கட்டளை முன்னின்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.