காலிஸ்தானி பயங்கரவாதத்தின் அறிகுறி

லண்டனில் உள்ள பாரதத் தூதரகம் மீது காலிஸ்தானி பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதல் ‘முற்றிலும் தவறானவை’ என்று கூறியுள்ள பாரதத்துக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், இந்த சூழல் எங்கள் நாட்டுக்கு ஏற்பட்டிருந்தால், லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பாரத அரசும் மக்களும் எவ்வளவு கோபமாக உள்ளார்களோ அதே கோபத்தில் நானும் இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார். டெல்லியில் உள்ள அனந்தா மையத்தில்  நடைபெற்ற இங்கிலாந்தின் ஒருங்கிணைந்த மறுஆய்வு புதுப்பிப்பு பற்றிய சிந்தனைவாதிகள் நிகழ்வில் எல்லிஸ் பேசுகையில், “பாரதத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவு இங்கிலாந்தின் இந்தோ பசிபிக் திட்டங்களுக்கும் அதன் எதிர்கால வெளியுறவுக் கொள்கைக்கும் முற்றிலும் மையமானது. பயங்கரவாத விவகாரத்தில் இரு நாடுகளும் கருத்து வேறுபாடுகளை சமாளிக்கும் திறன் கொண்டவை. பாரதத் தூதரகத்தில் நடந்தது முற்றிலும் சரியில்லை என்பதில் இரு நாடுகளுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த சம்பவம் ஒரு பிரச்சனையின் அறிகுறி, குறிப்பாக காலிஸ்தானி பயங்கரவாதத்தின் அறிகுறி இது. இது எந்த ஒரு குறிப்பிட்ட குழுவினருடனும் அல்ல. ஆனால் ஒட்டுமொத்தமாக எந்த நாட்டிற்கும் பயங்கரவாதம் ஆபத்தானது தான். பயங்கரவாதப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான இங்கிலாந்து அரசின் அணுகுமுறை தவறான தகவல்களைக் கையாளுதல், மத நிறுவனங்களில் தீவிரமயமாக்கல் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. 2024 மற்றும் 2025ல் இரு நாடுகளும் தேர்தல் சுழற்சிகளுக்குள் நுழைவதற்கு முன்பு, நெருக்கமான பாரத இங்கிலாந்து உறவுகள் என்பதில் இரு நாடுகளும் கவனம் கொள்வது மிகவும் அவசியம்” என்று குறிப்பிட்டார். இந்த ஆண்டு மார்ச் 19 அன்று லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டு தூதரின் முதல் பொது அறிக்கை இதுவாகும்.