பாரதம் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட பல நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடுகின்றனர். கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது.
இந்த சூழலில், சீன அரசின் ஜீரோ கோவிட் கொள்கை, தீவிர கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களிடம் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில், சீனாவின் ஐபோன் நகரம் என்றழைக்கப்படும் செங்சோவ் நகரில், கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். கடந்த வாரம் காங்சாவோ நகரத்தில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சாலையில் போராட்டம் நடத்தினர். அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் ஷாங்காய், உரும்கி உட்பட சீனாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். ‘கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் நாங்கள் இறக்கவும் தயார்’ என்று எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர்.
ஆளும் சீன கம்யூனிச கட்சிக்கு எதிராக கோஷங்கள் இடுவது அந்நாட்டில் அரிதிலும் அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கு அங்கு மிகக்கடுமையான தண்டனைகள் உண்டு. முன்பு அப்படி கோஷமிட்டவர்களில் பலர் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. 1989ல் நடைபெற்ற தியான் மென் சதுக்க படுகொலையே இதற்கு சான்று. ஆனால், தற்போது சீன அரசின் அராஜத்தை எதிர்த்து பொங்கி எழுந்துள்ள மக்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக, அதிபர் ஜி ஜின்பிங் ஒழிக என்று கோஷங்களை எழுப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் அரசின் மீது எவ்வளவு கொதிப்படைந்துள்ளனர் என்பதை வெளிக்காட்டுகிறது. மக்களின் போராட்டத்துக்கு இதுவரை சீன அரசின் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதனிடையே, சீனாவில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவை பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வீரியமில்லாத, தரமற்ற, பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தடுப்பூசிகள் என ஏற்கனவே பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. சீன விஞ்ஞானிகள் சிலரே இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால், சீன மக்கள் தொகையில் 93 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு கூறிவந்தாலும் தரமற்ற மருந்தின் காரணமாகவே சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.