சமீபகாலமாகவே திரைத்துறையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நிஜத்தை தோலுரித்துக் காட்டும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வந்துகொண்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தோலுரித்துக் காட்டிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, கிறிஸ்தவ மிஷனரிகள் எப்படியெல்லாம் மத மாற்றம் செய்கிறார்கள் என்பது வெளிச்சம்போட்டுக் காட்டிய ‘ட்ரான்ஸ்’ (இந்த மலையாள திரைப்படம், தமிழில்‘நிலைமறந்தவன்’ என்ற பெயரில் வெளியானது) போன்றவற்றை சொல்லலாம். அந்த வகையில், அடுத்ததாக வெளிவரவுள்ளது ‘கிடுகு’. திராவிட மாடலின் பித்தலாட்டத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது இந்த ‘கிடுகு’ திரைப்படம். இந்த திரைப்படத்தை வீரமுருகன் இயக்கியுள்ளார். ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் கணேஷ் நாகா தயாரிப்பில், ராஜேஸ்வரி சந்திரசேகர் இணைந்து தயாரித்திருக்கிறார். இப்படத்தில் பெரிய நடிகர்கள் அதிகமின்றி சிறிய நடிகர்களை வைத்தே உருவாக்கியுள்ளனர். படத்திற்கு கதைதான் முக்கியம்; அடுத்ததுதானே நடிகர்கள்? இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில், ஜூலை மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் திராவிட மாடலை நன்றாக நையாண்டி செய்துள்ளனர் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. ஒவ்வொரு வசனமும் அருமை. உதாரணமாக, ‘அந்தப் பய ஜாதிய ஒழிக்கிறேன்னு சொல்லி என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான் சார். அப்புறம் மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன்னு சொல்லி நடுரோட்டுல வச்சு தாலிய அறுப்பான்’ என்று ஒரு பெண்ணின் தாய் பேசும் வசனம் உட்பட, ‘அவ்வளவு பெரிய ராமாயணம், மகாபாரதத்தையே ஒரு பொய்யச் சொல்லி ஊரையே நம்ப வச்சு, ஊருக்கு முன்னாடி ராமனையே செருப்பால அடிச்சவனுங்கடா நாங்க’ என்று அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொள்வது, ‘மூலப் பத்திரத்தை காட்டச் சொல்லுங்க’ ‘எல்லா மதத்துக்கும் சுதந்திரம் கிடைச்சுடுச்சு, ஆனா எங்க ஹிந்து மதத்துக்கு மட்டும் சுதந்திரம் இன்னும் கிடைக்கல’ ‘இந்திய சுதந்திரத்துக்காக போராடுன, சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை தேவையில்லைன்னு சட்டசபையில சொல்லுதே உங்க திராவிட அரசியல். ஆனா, இந்தியாவுக்கு சுதந்திரம் வேணவே வேணாம்னு சொன்ன ராமசாமிக்கு மட்டும் எதுக்கு சிலை’ என வரும் பல வசனங்களை சொல்லலாம். ‘படம் வெளியானதும் முதலில் சென்று பார்த்துவிட வேண்டும், நிலை மறந்தவன் படத்தை போலவே இந்த படத்தையும் முடக்க உ.பி’க்கள் முயற்சிக்கலாம்’ என சமூக ஊடகங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.