பல்கலைகளுக்கு ஒரே பாடத்திட்டம்; கல்லூரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

தமிழகத்தில், கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில், 13 அரசு பல்கலைகள் செயல்படுகின்றன. இவை அனைத்துக்கும் சேர்த்து, தமிழக உயர் கல்வி மன்றம் வழியே, பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டத்தை தான் அனைத்து பல்கலைக் கழகங்களும் பின்பற்ற வேண்டும் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு, பல்கலைக் கழகங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இதுகுறித்து, கல்லுாரி ஆசிரியர்களின் கூட்டுக் குழுவான, ‘ஜாக்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாகராஜன் கூறியதாவது: மத்திய அரசின் யு.ஜி.சி., விதிகளையும், தமிழகத்தில் ஒவ்வொரு பல்கலை கழகங்களுக்கும் உரிய தனிப்பட்ட சட்டங்களையும் மீறும் வகையில், ஒரே பாடத்திட்ட நடவடிக்கை உள்ளது. பல்கலைக் கழக மானிய குழுவான யு.ஜி.சி., வழங்கிய, உயர் கல்வி நிறுவன தன்னாட்சி அதிகாரத்தையும், உரிமைகளையும் பறிக்கும் வகையிலும், ஒரே பாடத்திட்ட நடவடிக்கை உள்ளது. இதை எந்த பல்கலைக் கழகமும், கல்லுாரியும் ஏற்காது. ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அந்தந்த பகுதிகளின் கலை, மொழி, புவியியல், வாழ்வியலுக்கு ஏற்ப, வரலாறு, இலக்கியம், வேளாண்மை மற்றும் அறிவியல் சார்ந்த பாடத்திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, அனைத்து வெளிநாடுகளிலும், இந்த நடைமுறை தான் உள்ளது. மேலும், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் உள்கட்டமைப்பு, பேராசிரியர்களின் படிப்புகள், அவர்களின் ஆராய்ச்சி திட்டங்கள் அடிப்படையில் தான், பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் மாற்றும் வகையில், ஒரே பாடத்திட்டம் என்பது சாத்தியமற்றது. மேலும், பல்கலைகளில் உள்ள, ‘போர்டு ஆப் ஸ்டடிஸ்’ என்ற கல்வி குழுவின் நிபுணர்கள் தான் பாடத்திட்டங்களை உருவாக்குவர். அதற்கு அகடமிக் கவுன்சிலும், சிண்டி கேட் குழுவும் ஒப்புதல் அளிக்கும். கல்வி குழு உறுப்பினர்களும், பாடத்திட்டமும், மூன்று ஆண்டுகளுக்கு முறை மாற்றப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை மீறி, ஒரே பாடத்திட்டத்தை கட்டாயப்படுத்துவது, சட்டத்தை மீறிய செயல். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே பாடத்திட்டம் குறித்து, சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: அனைத்து பல்கலைக் கழகங்களிலும், ‘போர்டு ஆப் ஸ்டடிஸ்’ மற்றும், ‘அகடமிக் கவுன்சில்’ என்ற அமைப்புகள் உள்ளன. அவற்றின் அனுமதியின்றி, ஒப்புதலின்றி, அரசு தரப்பில் ஒரே பாடத்திட்டத்தை திணிக்க முடியாது. பல்கலைக் கழகங்களின் உரிமைகளை பறிக்கும் விதமாகவும், பன்முகத் தன்மையான படிப்புகளை, மாணவர்கள் படிப்பதை தடுக்கும் வகையிலும், ஒரே பாடத்திட்டம் என்ற அம்சம் கொண்டு வரப்பட்டுஉள்ளது.  இது, தமிழக அரசின் தவறான நடவடிக்கை மட்டுமின்றி, பல்வேறு வகை பல்கலைக் கழகங்களுக்கு மூடுவிழா காண வழிவகுக்கும். இதை அமல்படுத்தினால், முதல்வர் கூறிய உயர் கல்வியின் பொற்காலம் என்பது, கற்காலமாகும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழக அரசின் ஒரே பாடத்திட்ட நடைமுறையை கண்டித்து, இன்று தமிழகம் முழுதும் கல்லுாரிகளின் முன் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதையடுத்து, வரும், 21ம் தேதி பல்கலைக் கழகங்களின் முன் ஆர்ப்பாட்டமும், 25ம் தேதி உயர் கல்வி மன்றத்தை முற்றுகையிட்டு, பேராசிரியர்களுக்கான பயணப்படியை திருப்பி அளிக்கும் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.