மேற்கு வங்கத்தின் ‘ஒரு ரூபாய் மருத்துவர்’ என்று புகழ் பெற்ற சுஷோவன் பந்தோபாத்யாய, கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார். 84 வயதான அவர் சிறுநீரகம் தொடர்பான நோயால் சுமார் இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். பந்தோபாத்யாயின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியும் இரங்கல் தெரிவித்தனர். ஒரு மருத்துவர் மட்டுமல்லாது முன்னாள் எம்.எல்.ஏவும் கூட. அவர் போல்பூர் தொகுதியில் இருந்து 1984ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். கடந்த காலத்தில் திருணமூல் காங்கிரஸின் உறுப்பினராகவும் இருந்தார், ஆனால் பின்னர் கட்சியை விட்டு வெளியேறினார். அவருக்கு 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டு, அதிகபட்ச நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டது. சுஷோவன் பந்தோபாத்யாய 60 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு சிகிச்சை அளித்த அவர், ‘ஏக் தகர் தக்தர்’ (ஒரு ரூபாய் மருத்துவர்) என்று அன்புடன் மக்களால் அழைக்கப்பட்டார்.