பிரதமர் நரேந்திர மோடி, 2014ம் ஆண்டு முதல் பாரதப் பிரதமராக பதவியேற்றார். பின்னர், 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவ்வகையில், வரும் 30ம் தேதியுடன் அவர் ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. உலகமே போற்றும் பிரதமர் மோடியின் சிறப்பான 9 வருட ஆட்சியை ஒருமாத காலம் பிரமாண்டமாக கொண்டாட பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. வரும் மே 30ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இந்த கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும். இதனை முன்னிட்டு மே 29ம் தேதி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோரும் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள். பிரதமர் மோடி, இம்மாதம் 30 அல்லது 31ம் தேதி, ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார். மேலும், இந்த ஒரு மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 51 பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கும் பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் 250 பிரபலமான குடும்பங்களை சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் ஒரு லட்சம் குடும்பங்களை பா.ஜ.க தலைவர்கள் சந்திப்பார்கள்.