ஒரு கோடி தேசியக் கொடிகள் சாதனை

வரும் 15ம் தேதி நமது தேசம் சுதந்திர தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வீடுகள் தோறும் இன்று முதல் 15ம் தேதிவரை தேசியக் கொடிகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு அமைப்புகள், மத்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கு போதுமான அளவில் தேசியக் கொடி கிடைக்க மாநில அரசுகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. மேலும், அஞ்சல் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வகையில் கடந்த 10 நாட்களில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகளை விற்பனை செய்து அஞ்சலகங்கள் சாதனை புரிந்துள்ளது என மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அஞ்சல் நிலையங்களில் ஒரு தேசியக்கொடி ரூ. 25க்கு விற்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் அஞ்சலகம் இலவசமாக வீட்டுக்கே டெலிவரி செய்கிறது. அஞ்சல்துறையில் பணியாற்றும் 4.20 லட்சம் ஊழியர்களும் ‘வீடுகள்தோறும் தேசியக்கொடி’ என்ற பிரச்சாரத்தை உற்சாகமாகக் கொண்டு செல்கிறார்கள். அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை வரும் 15ம் தேதிவரை நடக்கும். மக்கள் அஞ்சலகங்களுக்கு நேரடியாகச் சென்றும் தேசியக் கொடியை வாங்கலாம். இது மட்டுமல்லாமல் தேசியக் கொடியுடன் செல்பி எடுத்து www.harghartiranga.com என்ற தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். புதிய இந்தியா கொண்டாடத்திலும் பங்கேற்று பதிவுசெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.