தாக்கத்தை ஏற்படுத்தும் நிஜ வாழ்க்கை சம்பவம்

கடந்த சில தினங்களுக்கு முன் ரோட்டரி ஹெரிடேஜ் மைசூருவின் உறுப்பினர்கள், கொரோனா சேவைக்கான அன்னதான தயாரிப்புகளில் மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த நேரம், பார்த்த உடன் ஏழை என்று சொல்லத்தக்க 70 வயதுக்கும் அதிகமான கமலம்மா அங்கு வந்திருந்தார். அவர் அங்கு சிறிது உணவை எதிர்பார்த்து வந்திருக்கலாம் என்பதுதான் அங்கிருந்தவர்களின் இயல்பான எதிர்பார்ப்பாக இருந்தது.அதனால், அவர் கேட்பதற்கு முன்பே அவரிடம் சென்று சில உணவுப் பொட்டலங்களை நீட்டியபோது அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார். பிறகு சற்றுத் தயக்கத்துடன் தனது தைரியத்தைத் திரட்டி, தான் மறைந்திருந்த ஒன்றை வெளியே எடுத்து நீட்டி, “நான் வாழும் பகுதியில் நீங்கள் வந்து உணவு இலவசமாக வழங்குவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இதில் எனது பங்களிப்பும் சிறிது இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.அதனால் நான் வாங்கும் 600 ரூபாய் மாத ஓய்வூதியத்திலிருந்து 500 ரூபாயை இதற்கு கொடுக்க வேண்டும் என்று வந்துள்ளேன்.இது ஒரு சிறிய தொகைதான்.ஆனால் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்” என அந்தத்தாய் கூறியபோது அங்கிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.