பிரிவினை பேசும் ஆ.ராசா

நாமக்கல்லில் தி.மு.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.கவின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ எனும் தலைப்பில் பேசினார். அப்போது அவர், “பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையை ஒதுக்கி ‘இந்தியா வாழ்க’ என்று சொன்னோம்.அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” எனக் கூறினார். ஆ.ராசாவின் இந்த பிரிவினைவாத கோரிக்கைக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் மூலம், ஹிந்து விரோதிகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் ஜெகத் காஸ்பர் போன்றோருக்கும் தி.மு.க தான் ஆதரவு அளிக்கிறது என்பதை இந்நிகழ்வு பட்டவர்தனமாக எடுத்துக்காட்டியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு ஸ்டாலின் இதுவரை மவுனம் காப்பது அவர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறார் என்ற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது. ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.கவின் நாராயணன் திருப்பதி, “தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள் என்று முதல்வரை மேடையில் வைத்து கொண்டு வேண்டுமென்றே இந்த பேச்சைப் பேசியிருக்கிறார் ஆ.ராசா.. ஈ.வெ.ரா வழி வேறு, அண்ணா வழி வேறு என்று தெளிவாக கூறியிருக்கிறார் ஆ.ராசா. அதாவது, தி.க பிளவுபட்டது போல் திமுகவும் பிளவுபடும் என்கிறார். இது திமுகவிற்கான மிரட்டல்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தி.மு.க எம்.பியான டி.கே.எஸ் இளங்கோவன்,  ‘தனி நாடு கோருவது தி.முக.வின் கொள்கையல்ல. மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்’ என கூறியுள்ளார்.