பலமுனை போட்டி?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான மனுத் தாக்கல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மனுக்கள் அக்டோபர் 1ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற அக்டோபர் 8. கடைசி நாள். தேர்தல் அக்டோபர் 17ல் நடக்கும். அக்டோபர் 19ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிடுவாரா இல்லையா என்ற குழப்பமான சூழலில், அவர் போட்டியிடாத சூழலில், காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலர் தேர்தலில் குதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “தேர்தலில் ராகுல் போட்டியிடுவார் என நான் நம்புகிறேன். அவர் போட்டியிடவில்லை என்றால் கட்சியின் உத்தரவை பெற்று நான் மனுத்தாக்கல் செய்வேன்” என்றார். சமீபத்தில் இதுகுறித்து சோனியாவை சந்தித்து பேசிய சசிதரூர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதனன் மிஸ்திரியை சந்தித்து தேர்தல் முறைகள் குறித்து விசாரித்துள்ளார். மனீஷ் திவாரி, மல்லிகார்ஜூன கார்கேவும் கூட இத்தேர்தலில் போட்டியிடலாம் என கூறப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் நான் ஏன் போட்டியிட கூடாது என்று திக் விஜய் சிங் கேட்டுள்ளார். முன்பு காங்கிரஸ் தலைவர் தேர்தல் பெயரளவுக்கு மட்டுமே நடந்த சூழலில், ராகுல் போட்டியிடவில்லை என்றால் தற்போது இது உண்மையான போட்டியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிகிறது.