முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட மைனர் பெண், தனது பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண் வயதுக்கு வந்திருந்தாலே போதும், 18 வயதுக்குக் குறைவானவராக இருந்தாலும், கணவருடன் இணைந்து வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தங்களை யாரும் பிரிக்க கூடாது என்பதை உறுதி செய்ய கோரி தம்பதியினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஜஸ்மீத் சிங் விசாரித்து, பெண் தாமாகவே திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட பிறகு அவர்களை பிரிக்க அரசுக்கு உரிமை கிடையாது. அப்படி செய்வது ஆக்கிரமிப்புக்கு இணையானது. போக்சோ சட்டம் என்பது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கின்றன ஒரு சட்டம். அது முஸ்லிம் சட்டத்துக்கும் பொருந்தும். அதேநேரத்தில் இந்த வழக்கு வேறுபட்டது. சட்டத்தின்படி தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, சிறுமியின் பெற்றோர், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்திய தண்டனை சட்டம் (பாலியல் வன்கொடுமை) பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 6 ஆகியவற்றின் கீழும் சிறுமியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்திருந்தனர். எனினும், அந்த சிறுமி, தனது பெற்றோரால் தொடர்ந்து அடிக்கப்படுவதாகவும் தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அரசு தாக்கல் செய்த வழக்கின் நிலை அறிக்கையில் சிறுமியின் பிறந்த தேதி ஆகஸ்ட் 2, 2006. அதாவது அவர் திருமணம் செய்துகொண்ட போது அவருக்கு 15 வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.