சிவராம்ஜி என்ற மாமனிதர்

தற்போது மதுரவாயலில் வசிக்கும் ரவி என்ற ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர், தனது சொந்த அலுவலுக்காக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சிவராம்ஜியிடம் கடிதம் கேட்டுள்ளார். ரவி, கடிதத்தைப் பெற்றுக்கொள்ள நேரில் வந்துள்ளார். சிவராம்ஜி தரையில் அமர்ந்து, டெஸ்கில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். ரவியைப் பார்த்ததும் எழுந்து நின்று, அலமாரியின் மேல் பலகையில் இருந்த கடிதத்தை எடுத்து சிவராம்ஜி தந்துள்ளார். ”80 வயதிலும் நம்மிடம் வேலை வாங்கவில்லையே சிவராம்ஜி?” என்று இன்றும் நினைவு கூர்கிறார் ரவி.

யார் இந்த சிவராம்ஜி… இவரது முழு பெயர் சிவராம் ஜோக்லேக்கர். மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி,யில் தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரியான அவர், 1942ம் ஆண்டில் அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் (சர்சங்கசாலக்) ஸ்ரீகுருஜி கோல்வல்கரின் அழைப்பை ஏற்று, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரகரானார் (முழுநேர ஊழியர்). தமிழகத்துக்கு 1944ல் அனுப்பப்பட்டார். சென்னை, மதுரை, திருச்சி என பல ஊர்களில் ஆர்.எஸ்.எஸ். பணியை வளர்த்தவர். மறைந்த ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் போன்ற பல ஹிந்து இயக்கத் தலைவர்களை அடையாளம் கண்டவர். தமிழகத்தில் ஹிந்து எழுச்சி நிகழும் என்று கனவு கண்ட தீர்க்கதரிசி. கண்தானம், ரத்ததானம், தேகதானம் போன்றவற்றைப் பற்றி பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். மாதிரி கிராமங்களை ஊக்குவிக்க மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்ணா ஹசாரே மூலம் மாற்றம் செய்யப்பட்ட ராலேகான் சிந்தி கிராமத்துக்கு ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்த சமூக ஆர்வலர்களை அழைத்து சென்றவர்.

சமூகத்தில் நல்லவர்களை அடையாளம் காணும் ’நல்லோர் வட்டம்’, சிந்தனையாளர்களை ஊக்குவிக்கும் ‘விஜில்’ போன்ற அமைப்புகளைத் துவங்கியவர். இன்று சென்னை சங்கர நேத்ராலயாவில் குடும்ப கண் தான திட்டத்துக்கு அடித்தளமிட்டவர். 1999ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு பணிகளைத் துவக்கியவர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது உடல், மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.

அவரைப் பற்றிய சில தகவல்கள்:

• திட்டமிட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். காலை சரியாக 4.45க்குள் துவங்கும் அவரது வாழ்க்கை, இரவு 10 மணி வரை இருக்கும். கடைசி ஆண்டுகளில் மதியம் 10 நிமிடங்கள் மட்டும் ஒய்வெடுப்பார்.

• மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும், தமிழைத் தவறில்லாமல் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டவர், தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவரிடமும் தமிழிலேயே பேச வலியுறுத்துவார்.

• இன்று மூத்த பத்திரிகையாளராக உள்ள ஒரு ஸ்வயம்சேவகரிடம், தமிழில் சிறந்த நாவல்களை வாங்கி வருமாறு சிவராம்ஜி கேட்டுள்ளார். புத்தகங்களை வாங்கி வந்த ஸ்வயம்சேவகர், பணம் வேண்டாம் என்று தயங்கினார். “உனக்கு தரணும்னா சங்க குருபூஜையில் சமர்ப்பணம் செஞ்சிக்கோ. எனக்கு சங்கம்தான் பணம் தரணும்” என்று கண்டிப்புடன் கூறி பணத்தைத் திணித்துவிட்டார் சிவராம்ஜி.

• பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுவதை பலரிடம் ஊக்குவித்து, ஏராளமானோரை வாசகர் கடிதங்களை எழுத வைத்தார். தேசியம், தெய்வீகம், நல்ல செய்திகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்து உற்சாகப்படுத்துவார். அதுவே, ‘விஜில்’ என்ற அமைப்பாக மாறியது.

• சிவராம்ஜியின் நேரம் தவறாமை நிகழ்ச்சிகள் பிரசித்தம். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், சென்னையை சுற்றியுள்ள கிராமங்களில் நல்லோர் வட்டம் ஒருநாள் நிகழ்ச்சி இருக்கும். சாப்பாடு கட்டிக்கொண்டு வர வேண்டும். “நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும். இந்தந்த நேரங்களில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில்  இருந்து, நிகழ்ச்சி நடக்கும் குறிப்பிட்ட கிராமத்துக்கு ரயில் வரும். இத்தனை மணிக்கு மேல் ரயிலில் வர வேண்டாம்” என்று தெளிவாகக் குறிப்பு இருக்கும். அதையும் மீறி, சிலர் தாமதமாக வந்துவிடுவார்கள். அவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார். கதவுகள் பூட்டப்பட்டுவிடும். வெளியே உட்கார வேண்டியதுதான். அடுத்த வாரம் முழுவதும், தாமதமாக வருபவர்களை நேரில் சந்தித்து காரணம் கேட்பார் சிவராம்ஜி.

• ஒருமுறை தாம்பரம் ரயில் நிலையத்தின் பின்புறம் காலை 8 மணிக்கு ஆஜராகிவிட வேண்டும் என்று ஸ்வயம்சேவகர்கள் சிலருக்கு தகவல் அனுப்பினார். அவர்களும் வந்தார்கள். 8 மணியானதும் வந்தவர்களின் பெயரை எழுதத் துவங்கிய சிவராம்ஜி, 8.05 ஆனதும் “நிகழ்ச்சி அவ்வளவுதான்” என்று அனுப்பிவிட்டாராம்.

• அதே போல, நெருக்கடி காலத்தில் எப்படி ஒன்றுசேர்வது என்பதை உணர்த்த நடு இரவில் 2 மணி, 3 மணிக்கு சிவராம்ஜி நுங்கம்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் நடத்திய நிகழ்ச்சிகளை இன்றும் பலர் நினைவுகூர்கிறார்கள்.
– சந்திர.பிரவீண்குமார்