ஏடிஎம்கள் மற்றும் கார்டு பேமெண்ட்கள் தொடர்பான சில அளவுருக்கள் இன்னும் பலவீனமாக இருந்தாலும், பெரிய மதிப்புள்ள டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் பாரதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து தலைமை நிலைக்கு நகர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், பாரதத்தின் உள்நாட்டு அட்டை நெட்வொர்க் பிரிவில் ‘ருபே’ அட்டை டெபிட் கார்டு பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனினும் கிரெடிட் கார்டு பிரிவில் பின்தங்கிய நிலையில், மொத்த கார்டுகளில் 3 சதவீதத்திற்கும் குறைவான பங்கையேக் கொண்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. டிஜிட்டல் முறையில் பில் செலுத்துவது, பொதுப் போக்குவரத்து டிக்கெட், பணம் அனுப்புவது, எல்லை தாண்டி பணம் அனுப்புவது போன்ற பணம் செலுத்தும் முறைகள், காசோலை பயன்பாடு குறைப்பு ஆகியவற்றில் பாரதம் முன்னேற்றம் கண்டுள்ளது. ஏ.டி.எம்கள் மற்றும் பி.ஓ.எஸ் டெர்மினல்களில் ஏற்றுக்கொள்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை, வளர்ந்த நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், பாரதத்தின் டிஜிட்டல் பணம் செலுத்தும் சூழல் பன்மடங்கு பெருகியுள்ளதை உறுதிப்படுத்துகிறது. ‘பெஞ்ச்மார்க்கிங் இந்தியாஸ் பேமென்ட் சிஸ்டம்ஸ்’ அமைப்பு இத்தகைய டிஜிட்டல் நிர்வாகத்தில் வரையறுக்கப்பட்ட 40 குறியீட்டுகளில் பாரதம் 25ல் மிக வலுவாக திகழ்வதாகவும் 8ல் சற்று பலவீனமாக உள்ளதாகவும் வகைப்படுத்தியுள்ளது. இது இதற்கு முந்தைய வருடத்தில் முறையே 21 மற்றும்12 என இருந்தது குறிப்பிடத்தக்கது.