தமிழக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இதனையடுத்து, தமிழகத்தில் 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று 2019ம் ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இந்த நடைமுறையை கைவிடக் கோரி ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த மே 9ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றுள்ளனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் அவர்களில் சுமார் 35 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய போராட்டக் குழுவினர், “தி.மு.க தனது தேர்தல் அறிக்கை 177ல் கூறியபடி எங்களுக்கு பணிவாய்ப்பை வழங்க வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை 57 ஆக உயர்த்தவேண்டும். கடந்த 3 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால், இதுவரை அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றனர்.