நடைமுறைக்கு வந்தது பொதுப்பாட திட்டம்

‘மாநிலம் முழுதும், இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுப்பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது’ என, அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், கலை, அறிவியல் கல்லுாரிகளில், அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு ‘வெயிட்டேஜ் மதிப்பெண்’ முறை பின்பற்றப்படுகிறது. இதை மாற்றி, அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், 75:25 என்ற அடிப்படையில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவேண்டும் என, கடந்த மார்ச் இறுதியில் அரசு அறிவித்தது. மேலும், அனைத்து கல்லுாரிகளிலும், 75 சதவீத பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக பின்பற்ற பொதுப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. போதிய அவகாசம் இன்றியும், அனைத்து தரப்பு கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுர்கள், முதல்வர்களை கலந்து ஆலோசிக்காமல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் பல்கலை, கல்லுாரி பேராசிரியர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதனால், பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 163 இளநிலை, 135 முதுநிலை உட்பட, 298 பாடப்பிரிவுகளுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வந்துள்ளது. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், 25 சதவீதம் பாடத்திட்டத்தில் மாறுதல்கள் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி கூறுகையில், ”இது, நல்ல திட்டம் தான். சற்று அவசரப்படாமல் அமல்படுத்தினால், உயர்கல்வியின் தரம் மேம்படும்,” என்றார்.