குழந்தைத் திருமணம் தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும், அசாமில் குழந்தை திருமணங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. குழந்தைத் திருமணங்களை தடுக்கவும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றவும், இந்த திருமணங்களால் பெண் குழந்தைகள் விரைவில் கருவுற்று இறப்பதை தடுக்கவும் அசாம் அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக அசாமில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அசாம் முழுவதும் குழந்தை திருமணங்களை செய்தவர்கள், அதனை நடத்திவைத்த முஸ்லீம்கள் மற்றும் ஹிந்து மத குருமார்கள் உட்பட சுமார் 2,200க்கும் மேற்பட்டவர்களை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏ.ஐ.டி.யு.எப்) தலைவரும் எம்.பியுமான பதுருதீன் அஜ்மல் பேசியபோது, “முஸ்லிம்களை துன்புறுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை. இப்போது அரசு தொடர் கைதுகள் செய்கிறது. விரைவில் இந்த குழந்தை திருமணங்களை செய்தவர்களில் 90 சதவீதத்தினர் முஸ்லிம்கள் என்று அரசு அறிவிக்கும். இந்த கைதுகள் ஒருதலைப்பட்சமாக இருக்கும். அது எங்களுக்குத் தெரியும். இந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிரானது. பா.ஜ.க பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். உள்ளது. அதனால் அவர்கள் மீது அழுத்தம் இருக்கும்” என்று எவ்வித ஆதாரமும் இன்றி கருத்துத் தெரிவித்துள்ளார். மாநில அரசு இப்படி எந்த பிர்ச்சாரத்தையும் இதுவரை செய்யவில்லை. அதேசமயம், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், ஜாதி, கட்சி என பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதுருதீன் அஜ்மலின் கருத்துக்கு பதிலளித்துள்ள பா.ஜ.க தலைவர் திலீப் சைகியா, “பத்ருதீன் அஜ்மல் முற்றிலும் ஒரு வகுப்புவாதி, அரசின் ஒவ்வொரு முயற்சியிலும் மதவாத சாயம் பூசுவது மட்டுமே அவரது கட்சியின் முழு நேரப்பணி. அவர்கள் அனைத்திலும் எப்போதும் மதக் கோணத்தைக் கண்டறியவே முயற்சி செய்கிறார்கள். அவர்கள்வாக்கு வங்கிக்காக எதையும் செய்வார்கள். இந்த குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைக்கும் எந்த ஜாதிக்கும், எந்த சமூகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பதுருதீன் அஜ்மல் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. அவர் அரசியல் சாசனத்தைப் புரிந்துகொண்டு அதில் நம்பிக்கை வைத்திருந்தால், அவர் இப்படிப்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது. மாறாக, அவர் குழந்தைகள் திருமணத்தை நிறுத்தியிருக்க வேண்டும், இது தொடர்பாக அவர் ஏன் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.