கட்டுக்கட்டாக பணம், குவியலாகத் தங்கம்

மேற்கு வங்கத்தை ஆளும் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் தொழில் துறை அமைச்சரான பார்த்தா சட்டர்ஜி, சமீபத்தில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது பெண் உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் 21 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. பார்த்தா சட்டர்ஜி ஏற்கனவே கல்வி அமைச்சராக இருந்தபோது, ஆசிரியர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு அந்த லஞ்சப் பணத்தை அர்பிதா முகர்ஜி வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், கோல்கட்டாவில் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். அதில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் சிக்கின. இதனையடுத்து பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு பணம் எண்ணப்பட்டது. அதில், அங்கு ரூ. 29 கோடி ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்கம் பறிமுதல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அர்பிதா முகர்ஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று திரிணமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குனால் கோஷ் கூறியுள்ளார். இதனிடையே, ஊழலில் சிக்கிய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து மமதா பானர்ஜி வெளியேற்றியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஊழல் புகாரில் கையும் களவுமாக சிக்கி 2 மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால், கெஜ்ரிவால் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது சிந்திக்கத்தக்கது.