பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஹிந்துக்களை வசைபாட வேண்டும் என்பதற்காகவே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
சுதந்திரப் போராட்டத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பு எந்தப் பங்களிப்பும் செலுத்தவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியென்றால், இத்தாலியில் பிறந்தவரான காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் பெற்றோரா நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டாா்கள்?
காங்கிரஸ் கட்சியை, இந்திய தேசிய காங்கிரஸ் என்று அழைப்பதைக் காட்டிலும், முஸ்லிம் லீக் காங்கிரஸ் என்ற பெயா் பொருத்தமானதாக இருக்கும்.
ஹிந்துக்களுக்கு எதிராகப் பேசியதற்காக, சோனியா காந்தியும், சரத் பவாரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா் சம்பித் பத்ரா.
காங்கிரஸ் பதிலடி: பாஜகவுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, அக்கட்சியை நாதுராம் கோட்சே கட்சி என்று காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் ஜெய்வீா் ஷொ்கில் கூறினாா். நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டதன் தாக்கத்தால் பாஜகவினா், காங்கிரஸை குறை கூறுகின்றனா் என்றும் அவா் கூறினாா்.