ராபர்ட் வாத்ரா கூட்டாளி சி.சி.தம்பி கைது

காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவின் கணவருமான, ராபர்ட் வாத்ராவின் நெருங்கிய கூட்டாளியான, வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் தொழிலதிபர், சி.சி. தம்பி நேற்று, கைது செய்யப்பட்டார்.

இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொழிலதிபர், சி.சி. தம்பி மீது, சட்ட விரோத பணப் பரிமாற்றம், கேரளாவில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கியதில், அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கட்டுப்பாட்டில், துபாயைச் சேர்ந்த, ‘ஸ்கைலைட்’ நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், 2009ல், ஆயுத இடைத் தரகர், சஞ்சய் பண்டாரி, லண்டனில் வாங்கிய, 18 கோடி ரூபாய் மதிப்புள்ள குடியிருப்பு ஒன்றை கையகப்படுத்தியது. இதை, சட்ட விரோத பணப்பரிமாற்றம் மூலம், ராபர்ட் வாத்ரா வாங்கியதாக, அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளித்துள்ளது. அத்துடன், 90 கோடி ரூபாய்க்கு பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக, லண்டன் குடியிருப்பை புனரமைப்பது தொடர்பாக, வாத்ராவும், பண்டாரியும் பரிமாறிய மின்னஞ்சல்கள், அமலாக்கத் துறை வசம் சிக்கியுள்ளன. வாத்ரா, சி.சி.தம்பியை சில ஆண்டுகளுக்கு முன், எமிரேட்ஸ் விமான பயணத்தின் போது, ஒரே முறை சந்தித்ததாக, அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.ஆனால், தம்பி, சோனியாவின் உதவியாளர் மூலம், ராபர்ட் வாத்ராவை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அதுபோல, ‘லண்டன் குடியிருப்பில் தான் ஒருபோதும் தங்கியதில்லை’ என, வாத்ரா தெரிவித்த நிலையில், ‘அவர் அங்கு தங்கியிருந்தது உண்மை’ என, தம்பி கூறியுள்ளார். அத்துடன், ராபர்ட் வாத்ராவுக்கும், தலைமறைவாக உள்ள, சஞ்சய் பண்டாரிக்கும் உள்ள தொடர்பு குறித்தும், தம்பி தெரிவித்துள்ளார். இந்த விபரங்களைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் தம்பியை கைது செய்துள்ளனர். அவரிடம் நடைபெறும் விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ராபர்ட் வாத்ரா, ”இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை,” என, கூறியுள்ளார்.