அந்த மூன்றெழுத்து வரி () பற்றி ஒரே பேச்சாக இருக்கிறது. பலருக்கு ஒரே குழப்பமாகவும் இருக்கிறது. விஜயபாரதம் வாசகர்களுக்காக ஜிஎஸ்டியின் சில அம்சங்களில் தெளிவு தந்தார் சென்னை ஆடிட்டர் ஆர். சுப்ரமணியன். விஜயபாரதத்தின் புதிய அலுவலகத்திற்கு வருகை புரிந்த அவரது நேர்காணலிலிருந்து:
ஜி.எஸ்.டி. என்றால் என்ன?
சரக்கு மற்றும் சேவை வரி என்பதுதான் ஜி.எஸ்.டிக்கு தமிழில் விரிவாக்கம். மத்திய வரி, மாநில வரி (TNGST, CST) என்று முன்பு இருந்தது. பின்பு மதிப்புக் கூட்டுவரி (VAT) வந்தது. இதைத் தவிர, சேவை வரி, நுழைவு வரி என பலவகை வரிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பொருளுக்கும் வேறு வேறு விகிதத்தில் வரி விதிக்கப்பட்டு வருகின்றன. தேசம் முழுவதும் ஒரே மாதிரி வரி விதிக்கப்பட்டால் உற்பத்தியாளர்களுக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் விற்பனையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் வசதியாக இருக்கும் என்பதால் இந்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமலாக நாடாளுமன்றத்திலும் மாநிலங்கள் அவையில் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது உள்ள வரிவிதிப்பு முறையில் உள்ள பிரச்சினைகள் என்னென்ன?
நமது நாடெங்கும் ஒரு பொருளுக்கு ஒரே வித வரிவிதிப்பு முறை இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வரிவிதிப்பு விகிதம் மாறியுள்ளது. இதனால் பொருட்களை அனுப்புபவர் அந்த மாநில வரிவிதிப்பு முறையை அறிந்திருக்க வேண்டியுள்ளது. அதைத் தவிர வரி விதிப்பிற்கு ஏற்ப பல படிவங்களை (Forms) நிரப்ப வேண்டியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு வியாபாரி வேறொரு மாநிலத்தில் வியாபாரம் செய்ய அங்கே ஒரு அலுவலர், கிடங்கு (Godown) ஊழியர் என அமைக்க வேண்டியுள்ளது. தமிழக வியாபாரி தன் பட்டயக் கணக்காளரால் (ஆடிட்டர்) இயலாததால் வேறு மாநில கணக்காளரை புதிதாக நியமிக்க வேண்டியுள்ளது. இந்த ஜி.எஸ்.டி முறை நடைமுறைக்கு வந்ததும், ஒரே வரிவிதிப்பு அமல்படுத்தப்படும். அதனால் ஒரே படிவத்தை பயன்படுத்துவதால் மேற்சொன்ன பிரச்சினைகளும் இல்லாமல் அந்த வியாபாரி வேறு மாநிலத்தில் சுலபமாக தன் வியாபாரத்தை கவனிக்க முடியும்.
ஜி.எஸ்.டியினால் பொது மக்களுக்கு என்ன நன்மை?
தற்போது உள்ள முறையில் வணிகர் ஒரு பொருளை வரியுடன் ரூ.100க்கு வாங்கி, தனது செலவு, லாபம் சேர்த்து, அதனுடன் வரியை சேர்த்து விற்பனை செய்வார். புதிய ஜி.எஸ்.டி முறையில், தான் செலுத்த வேண்டிய வரியில், தான் பெற்ற வரியைக் கழித்துக் கொள்ளலாம். அதே சமயம் வரியும் குறைவாக இருக்கும். அப்போது அந்த வணிகர் தன் லாபத்தில் சில சதவீதத்தை குறைத்துக் கொண்டு, அதனை நுகர்வோருக்கு அளிப்பார். பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்களைப் பெறுவர். வியாபாரிகள் விற்பனையைப் அதிகரிக்க தங்களுடைய வருவாயை குறைத்துக் கொண்டு விற்றுமுதல் அதிகம் செய்வார்கள். மேன்மேலும் நுகர்வோர் பலனடைவார்.
சிறு வியாபாரிகள் முதல் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் வரை என்னென்ன சாதக, பாதகங்கள்?
சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிரமம் எதுவும் இல்லை. ரூ 50 லட்சம் வரை வணிகம் செய்பவர் 2 சதவீதம் மட்டும் வரி செலுத்தினால் போதும். புது வரம்பு ஒரு கோடி என நிர்ணயிக்க வாய்ப்புள்ளது என்பதால் சிறு வணிகர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் தொழிலை சுலபமாக செய்து வரலாம். சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு சிரமம் குறையும்; லாபம் அதிகரிக்கும். பலதரப்பட்ட வரிகளை கட்ட, கணக்கு ஏடுகளை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த, ஒரே விகித அளவு வரி விதிப்பினால் பொருட்களை வாங்குவதும், விற்பதும் சுலபமாகிவிடும். இந்த புதிய ஜி.எஸ்.டி முறை அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.
சிறுதொழில் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டியினால் நன்மை ஏற்படுமா? ஒவ்வொரு தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள், அதனால் ஏற்படக்கூடிய வேலை பளு குறையுமா?
நிச்சயமாக வேலை பளு குறையும். பலதரப்பட்ட படிவங்களை நிரப்பும் பணி குறையும். ஜி.எஸ்.டியினால் குறைந்தது 2 அல்லது 3 படிவங்கள் மட்டுமே கையாளப்படும். 2014 ஜூன் 14ல் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட மாதிரி ஜி.எஸ்.டி சட்டம் அனைத்துவித சந்தேகங்களையும் தீர்க்கும். இதனை மாநில அரசுகள் பின்பற்றி செயலாக்கும்போது சிறுதொழில் புரிவோரின் பழைய வரி விதிப்பு முறையினால் ஏற்பட்ட சிரமங்கள் குறையும். ஜி.எஸ்.டியினால் கிடைக்கும் பலன் புரியும்.
அதிகபட்ச வரிவிதிப்பு, எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு சதவீதம் வரி விதிக்கப்படும்?
இப்போது தனித்தனி வரிகள் அதிகம் இருப்பதால், விற்பனையின் கடைமுனையில் அதிகபட்ச தொகை கொடுக்க வேண்டியுள்ளது. ஜி.எஸ்.டி. முறையில் 15 அல்லது 16 சதவீதம் இருக்கும். சில பொருட்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 18 சதவீதம் இருக்கலாம். இதனை மாநில, மத்திய அரசுகள் 8+10 என்றோ, 9+9 என்றோ பிரித்துக் கொள்ளும்.
அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா?
வருவாய் பாதிப்பு அதிகம் ஏற்படாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தந்த மாநிலத்திலேயே உற்பத்தியாகி அங்கேயே விற்பனை செய்யப்பட்டால் வருமானம் முழுவதும் அந்த மாநிலத்திற்கே கிடைக்கும். குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உற்பத்தியில் முதன்மையாக உள்ளன. ‘தமிழகம் உற்பத்தி அதிகம் செய்யும் மாநிலம். இதன் பொருட்கள் இதர மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டால் வருவாய் இழப்பு ஏற்படும்’ என்கிறது தமிழக அரசு.
தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது; அதிகம் தான் கிடைக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். மதுபானம், சிகரெட், பெட்ரோல் ஜி.எஸ்.டிக்குள் வராது. இதன் மூலம் மாநில அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக மதுவிற்கு 53லிருந்து 72 சதவீதம் வரை விதிக்கப்படும் வரியினால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் வருவாய் அதிகம் கிடைக்கிறது. மேலும் இழப்பீட்டுத் தொகையாக 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்குத் தரப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளதால், தமிழக அரசின் எதிர்ப்பு அர்த்தமற்றது.
பாண்டிச்சேரி போன்ற சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டியினால் பாதிப்பு வருமா ?
புதிய வரிவிதிப்பினால் சிறிய மாநிலங்களுக்கு நஷ்டம் ஏற்படாது என்பதை உறுதிபடக் கூறலாம். மாநிலத்திற்குள் உள்ள வியாபாரத்திற்கு வரி விதிப்பதால் எந்தவித பாதிப்பும் வராது. மாநில வரி (SGST), மத்தியவரி என உள்ளதால் மாநிலத்திற்கு நஷ்டம் வர வாய்ப்பே இல்லை. விலைவாசி குறையும்.
மேலும் ஈரோடு மஞ்சள், கைத்தறி துணி போன்றவைகளுக்கு வரிவிலக்கு உண்டு. அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
அனைத்து மாநில அரசுகளும் ஆதரவு தெரிவித்தபோதும் தமிழக அதிமுக அரசு எதிர்ப்பது ஏன்?
தமிழக அரசு தனக்கு வருவாய் இழப்பு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறது. மது, பெட்ரோல், புகையிலை, கேஸ் மீதான வரிவிதிப்புகளுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், வரி வழி வருவாய் இழப்பு நிச்சயமாக இருக்காது என்பது தெளிவான உண்மை.
மாநில உரிமையில் தலையிடுவதா என்று சொல்வது சரியான வாதம் அல்ல. உலகளாவிய அளவில் போட்டியிட்டு முன்னேற வேண்டிய சூழலில், தேசிய அளவில் ஒரே சீரான வரிவிதிப்பு தேவை என்பது காலத்தின் கட்டாயம். உலகளவில் 130 நாடுகளில் ஒரே சீரான வரிவிதிப்பு முறை உள்ளதால் நாமும் இந்த முறைக்கு மாற வேண்டும். தேசம் முன்னேற வேண்டும். பல நாடுகளில் உள்ள சாதகங்களை பரிசீலித்து அதனை நம் ஜி.எஸ்.டியிலும் சேர்க்க வேண்டும். மத்திய அரசும் தனது வருவாயிலிருந்து திருப்பிக் கொடுக்கும் என்பதால் அச்சம் அவசியமில்லை. பெட்ரோல் வரியை அதிகப்படுத்தலாம். மதுவின் மீது வரி அதிகமாக்கலாம். மது விற்பனை குறைந்தால் மனித உயிர்கள் காக்கப்படுமே! நாட்டுக்கும் நல்லது தானே!
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்த ஏப்ரல் 2017 ஆகும் என்கிறார்களே…. ஏன்?
பாரதம் சுதந்திரம் அடைந்தபிறகு வரிவிதிப்புக் கொள்கையில் செய்யப்பட்ட மிகப் பெரிய புரட்சி இது. 2004ல் வாச்சு கமிட்டி மறைமுக வரியில், இதர நாடுகளில் உள்ள முறை நம் பாரத தேசத்துக்கும் தேவை என அறிவுறுத்தியது. உலக நாடுகளின், குறிப்பாக அண்டை நாடான சீனாவின் போட்டியை எதிர்கொள்ள ஜி.எஸ்.டி அவசியம் தேவைப்படுகிறது. அதனால் மாநில அரசுகள், பல்வேறு தொழில் துறையினர், பொருளாதார வல்லுநர்கள், நுகர்வோர் கருத்துகள் கேட்டறிய வேண்டியுள்ளது. அதே போல மீண்டும் மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது. மாநில சட்ட சபைகளில் ஜி.எஸ்.டி சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. குடியரசுத் தலைவர் உத்தரவு கொடுத்த பிறகுதான் இது முழுமையாக சட்டம் வடிவம் பெறும். அதற்கான காலம் அவசியப்படுவதால் ஏப்ரல் 2017 வரை செல்ல வேண்டியுள்ளது. பாஜகவின் மோடி அரசு பூரணமான ஜனநாயக கொள்கையை கடைபிடிக்கிறது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது அல்லவா?
மாநில அரசுகள் இத்தீர்மானத்தை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா?
பல மாநிலங்கள் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுவிட்ட பிறகு ஏதோ ஒரு சில மாநிலங்கள் தீர்மானத்தை நிறைவேற்றியே ஆக வேண்டிய சூழல் ஏற்படும். VAT ACT – 2006ஐ தமிழக அரசு எதிர்த்தபோதும், 1.1.2007ல் ஏற்றுக்கொண்டு விட்டதே! எவரும் தனித்துப் போக முடியாது. வியாபாரிகள் தங்கள் நிறுவனத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றி விடுவார்கள். அதனால் நஷ்டம் ஜி.எஸ்.டியை ஏற்காத மாநிலத்திற்குத்தான் ஏற்படும்.
எந்தெந்த பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படும்? எதெற்கெல்லாம் விலக்கு?
ஜி.எஸ்.டிக்கான கவுன்சில் போடப்பட்டுள்ளது. அது பூஜ்யம் சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை என்பதை தீர்மானிக்கும். அதுவரை நாம் காத்திருக்கலாமே.
சாதாரண குடும்ப பட்ஜெட்டில் ஜி.எஸ்.டியால் மாற்றம் வருமா?
நிச்சயமாக. குடும்ப பட்ஜெட்டில் கணிசமான அளவு தொகை மீதம் ஆகும் என்பது உறுதி. குறிப்பாக விலைவாசி குறையும். ஜி.எஸ்.டியினால் வணிகர்கள் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்திலிருந்து ஒரு பங்கை நுகர்வோருக்கு விட்டுக் கொடுப்பார்கள். குறைந்தது 10 சதவீதம் மிச்சப்படுத்தி சேமிக்க முடியும்.
ஜி.எஸ்.டியினால் தங்கம் விலை குறையுமா?
தங்கத்தை அந்நிய நாடுகளிலிருந்து வாங்குகிறோம். சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஏற்றத் தாழ்வுகளைப் பொறுத்துதான் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம், பொருட்கள் உற்பத்தி ஆகி பாரதத்திற்கு அந்நிய செலாவணி அதிகம் கிடைக்கும்போது, இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கும். ‘மேக் இன் இந்தியா’விற்கு ஜி.எஸ்.டி ஒரு நல்ல கருவி. அதனால், சில வருடங்களிலேயே பாரதம் பொருளாதாரத்தில் முன்னேறும். அப்போது தங்கம் விலை குறையும். பெண்மணிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையா?
பல சாதனைகளின் நாயகன் மோடிஜி, ஜி.எஸ்.டி நாட்டிற்குத் தேவையா… இல்லையா என்று மட்டும் பேசுவோம். இதன் பெருமையை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ஜி.எஸ்.டி சட்டத்தை பாஜக எதிர்த்ததன் காரணம், தெளிவான சட்ட திட்டங்கள் அதில் இல்லை. வரி சதவீதம் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது தெளிவான ‘ஜி.எஸ்.டி மாதிரி’ உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதும் சாதனைதான். பல மாநில அரசுகள் ஆதரவு அளித்துள்ளதும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒப்புக் கொண்டதும் மிகப் பெரிய சாதனை தானே!
செக்போஸ்ட்கள் குறையும் என்பதும் அங்கு காத்திருக்கும் நேரம் தேவையில்லை என்பதும் 50 லட்சம் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு 2 சதவீதம் தான் வரி என்பதும் இதனால் கறுப்புப் பணம் குறையும் என்பதும் பாஜக அரசின், பிரதமர் மோடியின் சாதனைதான்.