குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று விளக்கும் பிரசாரத்தை பாஜக தேசியத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா பிரசாரத்தை தொடங்கிவைத்தார். பின்னர், தில்லி லாஜ்பத் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு, உள்ளூர் பாஜக பொறுப்பாளர்களுடன் சென்ற அவர், வீட்டிலிருந்தவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி கலந்துரையாடினார். மேலும், இச்சட்டத்துக்கு ஆதரவு கொடுக்க விரும்பினால் “மிஸ்டு கால்’ செய்யலாம் என்றும் கூறி அதற்கான செல்லிடப்பேசி எண்ணையும் வழங்கினார். அப்போது, அக்குடியிருப்பில் வாடகைக்குக் குடியிருக்கும் இஸ்லாமிய குடும்பத்தினரையும் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.
அமித் ஷாவுடன் புது தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மீனாட்சி லேகியும் சென்றார். அவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரங்களை பின்னுக்குத் தள்ளி அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இப்பிரசாரத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இப்பிரசாரத்தின்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்து வருகிறோம்’ என்றார்.
தில்லி பாஜக மேலிடப் பொறுப்பாளர் ஷியாம் ஜாஜு கூறுகையில், “தில்லியில் இப்பிரசாரத்தை அடுத்த பத்து தினங்களுக்கு பாஜக தொண்டர்கள் தொடர்ந்து மேற்கொள்வார்கள்’ என்றார்.
இதேபோல், ஜெய்ப்பூரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லக்னெளவில் ராஜ்நாத் சிங், காஜியாபாதில் ஜெ.பி. நட்டா , வி.கே. சிங் ஆகியோர் இப்பிரசாரத்தை மேற்கொண்டனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கட்சியின் தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தனர்.
அமித் ஷாவின் பிரசாரத்தின் போது, அவர் சென்ற தெருவில் ஒரு மாடி வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமிய பெண் வழக்குரைஞர், சில பதாகைகளை காட்டி, “அவமானம் அவமானம்’ என்று கோஷமிட்டார். அப்போது, அப்பெண்ணின் செயலைத் தடுக்கவும் பதாகையைப் பறிக்கவும் முயன்ற போலீஸாரை பாஜகவினர் தடுத்து அவரை விட்டுவிடும்படி கூறினர். மேலும், கோஷமிட்ட அப்பெண்ணிடம், நம் நாட்டில் உங்களுக்கு என்ன குறை? இச்சட்டத்தால் உங்களுக்கு என்ன பிரச்னை என்று கீழே இறங்கி வந்து கூறுங்கள் என்றும் பாஜகவினர் கேட்டுக் கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு: இதனிடையே, பாஜகவின் இப்பிரசாரம் குறித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான மிஸ்டு கால் குறித்தும் சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் தவறான பதிவுகளை வெளியிட்டு வருவதாக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் பாஜக முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கட்சித் தலைவர் அமித் ஷா இந்த மிஸ்டு கால் எண் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில், எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பினர். மிஸ்டு கால் எண்ணைக் குறிப்பிட்டு, “அந்த எண்ணை டயல் செய்தால் தனிமையில் இருக்கும் இளம் பெண்களிடம் பேசலாம்’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அந்த எண் பாஜகவினுடையது. நெட்ஃபிக்ஸ் எண் அல்ல. ஒரு நல்ல செயலை மேற்கொள்ளும் போது எதிர்க்கட்சிகள் இதுபோன்று கொச்சைப்படுத்தி கேலிக்கூத்தாக்குவது ஏன்?’ என்றார்.