இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோவை பகிர்ந்த பாக்., பிரதமர் இம்ரான் கான், தங்கள் சொந்த நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
பாக்., பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களை போலீசார் தாக்குவதாக மூன்று வீடியோக்களை டுவிட்டரில் பகிர்ந்தார். அதில், மக்களை போலீசார் கொடூரமாக தாக்குவது போலவும், ரத்த வெள்ளத்தில் பலர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் பாதுகாப்புக்காக ஓடுவது போலவும் வீடியோவில் தெரிந்தது. இதற்கு உ.பி., போலீசார் மறுப்பு தெரிவித்ததுடன், வங்கதேசத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் கூறினர். இதனை நிரூபிக்கும் வகையில், வீடியோவில் உள்ள போலீசார் ரேபிட் ஆக்சன் பட்டாலியன் (RAB) கவசத்தை வைத்திருப்பது தெரிந்தது.வீடியோ போலியானது என தெரிந்த பின்னர், இம்ரான் கான் அந்த பதிவை டுவிட்டரில் நீக்கினார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாக்., பிரதமர், வங்கதேசத்தில் நடந்ததை பகிர்ந்து இந்தியாவில் நடந்தது என போலியான வீடியோவை பகிர்ந்துள்ளார். இம்ரான் கான் அவர்களே, உங்கள் சொந்தநாட்டை பற்றி கவலைப்படுங்கள். ஜின்னாவின் தவறான கொள்கையை நாங்கள் நிராகரித்து விட்டோம். இந்திய முஸ்லிம்களாக இருப்பதை பெருமையாக நினைக்கிறோம் என்றார்.