கேரளாவில், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுற்றுலா பயணியர் உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர்கள், தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, 2016ல் தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது, கண்ணுார் மாவட்டம், கனகமாலா என்ற இடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஏழு பேரை கைது செய்தனர். என்.ஐ.ஏ., அதிகாரிகள்அவர்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுற்றுலா பயணியர் ஆகியோர் மீது, பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிந்தது. மேலும், கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும், அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிந்தது. இவர்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில், இவர்கள் ஐ.எஸ்., அமைப்பில் பயிற்சி பெறவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டது நிரூபணமானது.
இந்நிலையில், சிறப்பு நீதிபதி கிருஷ்ணகுமார், இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்தார். அதில், ஜசீம் என்பவர் விடுவிக்கப்பட்டார். அபராதம்வழக்கின் முதல் குற்றவாளியான மன்சீத் மெஹ்மூத் என்பவருக்கு, 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற, ஐந்து குற்றவாளிகளுக்கு, மூன்று ஆண்டுகளில் இருந்து, 10 ஆண்டுகள் வரை, கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.