பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற , நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்து பெண் கடத்தப்பட்டு, செப்டம்பர் மாதம் இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாற்றப்பட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தைத்கண்டித்து ஹிந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான சட்டத்தை இயற்ற இம்ரான் கான் தலைமையிலான அரசு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற, சட்ட வரைவை உருவாக்குவதற்காக, 22 எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்ற குழுவை நாடாளுமன்ற செயலக தலைவர் சாதிக் சஞ்ரானி நியமித்துள்ளார்.
மத விவகாரத் துறை அமைச்சர் நுாருல் ஹக் காத்ரி, மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் இல் முகமது கான் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசோக் குமார், மாலிக், மாலிக் முகமது, அமீர் தோகா, சுனிலா ரூத், ஜெய பிரகாஷ், லால் சந்த், முகமது அஸ்லாம் பூடானி, ராணா தன்வீர் ஹுசைன், தர்ஷன், கேசூ மால் கீயல் தாஸ், ஷாகுப்தா ஜுமானி, ரமேஷ் லால், நவீத் அமீர் ஜீவா, அப்துல் வாசே ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.