ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பாசல்பூரா ((Pazalpora)) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சற்றும் தாமதிக்காமல், பாதுகாப்புப் படையினர், கடுமையான பதிலடி கொடுத்தனர். இதனால், பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே, துப்பாக்கிச் சண்டை மூண்டது.
பயங்கரவாத தாக்குதல் நடத்த, நசீர் சாட்ரூ ((Nasir Chadru)) என்பவன் தலைமையில் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணிகளிலும் பாதுகாப்புப் படையினர், உள்ளூர் காவல்துறையினரோடு இணைந்து, தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 20 முகாம்கள் அமைத்து, இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் முழுவதும், பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் கடுமையான பதிலடியில், மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல் முஜாஹிதின் ((Hizbul Mujahideen)) தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது.