ஆர்.எஸ்.எஸ், தேசியக் கொடியான மூவண்ணக் கொடியையும் காவிக் கொடியையும் சமமான மரியாதை கொடுத்துப் போற்றுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் சர்கார்யவாஹ் (அகில பாரத பொதுச் செயலர்) சுரேஷ் பையாஜி ஜோஷி, ஏப்ரல் 2 அன்று, மும்பையில் தீன்தயாள் ஆராய்ச்சிக் கழகத்தின் நிகழ்ச்சியில், ‘ராஜ்ய தர்மமும் ராஷ்ட்ர தர்மமும்’ என்ற தலைப்பில் பேசுகையில் அறிவித்தார்.
தேசம் (நாடு), ராஜ்யம் (அரசு; ஆங்கிலத்தில் ‘ஸ்டேட்’), ராஷ்ட்ரம் ஆகிய இம்மூன்றும் வெவ்வேறு பொருள்படுபவை. ஆனால் ஆங்கிலேயர்கள் இவற்றைக் குழப்பிவிட்டார்கள்.
தேசம் (நாடு) என்பது நிலப்பரப்பைக் குறிப்பது. எனவே தேசத்தின் எல்லை விரிவதும் சுருங்குவதுமாக இருக்கிறது.
ராஜ்யம் (அரசு) தேவையான வசதி செய்து கொடுத்து பாதுகாக்கும் அரசியல் அமைப்பு; அது காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும்.
ராஷ்ட்ரம் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் சுயமாக வளர்ச்சிபெற்றுள்ள கலாச்சார வாழ்க்கை. ஒருபோதும் இது மாறுவதே இல்லை.
குடியுரிமையை சட்டத்தின் வாயிலாக அடைந்துவிடலாம். ஆனால், தேசத்தைத் தாயாகவும் தன்னை புதல்வனாகவும் உணர்பவனே ‘ராஷ்ட்ரிய’ (ராஷ்ட்ரத்திற்கு உரியவன்) ஆகிறான். ஒரு ராஷ்ட்ரத்தில் பல ராஜ்யங்கள் இருக்கலாம்; ஒரு ராஜ்யத்தில் பல ராஷ்ட்ரங்கள் இருக்க முடியும்.
‘பாரதம் உருவாகி வரும் ஒரு தேசம்’ என்ற மாயையும் ஆங்கிலேயர்களால் பரப்பப் பட்டதுதான். பாரதம் தொன்மையான ராஷ்ட்ரம்.
அரசியல் சாஸனத்தில் 1947ல் தேசியக் கொடி என ஏற்கப்பட்டுள்ள மூவண்ணக் கொடிக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு பிரஜைக்கும் கடமை.
ஹிந்து ராஷ்ட்ரத்தின் அடையாளமாக காவிக் கொடி தொன்றுதொட்டு போற்றுதலுக்கு உரிய இடம் வகித்து வருகிறது.
தேசியக் கொடியான மூவண்ணக் கொடியையும் காவிக் கொடியையும் ஒன்றுபோல சமமான மரியாதை கொடுத்துப் போற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். ‘ஜன கண மன’வில் தேசத்தின் வர்ணனை வருகிறது. ‘வந்தேமாதர’த்தில் ராஷ்ட்ரத்தின் வர்ணனை வருகிறது. அனைவரும் இரண்டையும் மதிக்க வேண்டும்.
பாரத பூமியை அன்னையாக உணர்பவர்கள், ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொல்கிறார்கள். இதை போக பூமியாகக் கருதுபவர்கள், ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொல்ல மறுக்கிறார்கள்.
இதுதான் சுரேஷ் ஜோஷி பேசியது.
ஆனால் ‘தினத்தந்தி’ நாளிதழ் ஏப்ரல் 2 அன்று பின் வருமாறு செய்தி வெளியிட்டது:
வந்தே மாதரம் தான் இந்தியாவின் உண்மையான தேசிய கீதம்; ஜன கன மன இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். செயலாளர் பையாஜி ஜோஷி கூறியுள்ளார். வந்தே மாதரம் தான் இந்தியாவின் உண்மையான தேசிய கீதம் ஆனால் இன்று ஜன கன மன பாடல் தேசியகீதமாக ஆக்கப்பட்டுள்ளது. ஜன கன மன பாடல் மதிக்கப்பட வேண்டியது. ஆனால் தேசிய கீதம் என நமது அரசியலமைப்பு உண்மையில் குறிப்பிடுவது வந்தே மட்டுமே. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடியே நமது நாட்டை உருவாக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஜன கன மன ஒரு மாநிலத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் வந்தே மாதரம் நாட்டின் ஒற்றுமைத் தன்மையை மையப்படுத்துகிறது. இது தான் இந்த இரு பாடல்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை என்று ஆர்.எஸ்.எஸ். செயலாளர் பையாஜி ஜோஷி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத செய்தித் தொடர்பாளர் டாக்டர் மன்மோகன் வைத்யா ஏப்ரல் 2 அன்று ட்விட்டரில்,
ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச் செயலர் பையாஜி ஜோஷி தேசியக் கொடியையோ, தேசிய கீதத்தையோ மாற்ற வேண்டும் என்று பேசவில்லை” என்று பதிவு செய்தார்.
ஆங்கில நாளிதழ் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் மன்மோகன் வைத்ய அறிக்கையை செய்தி ஆக்குகையில் அவரது பெயருக்கு மேலே ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை பொது செயலர் தத்தாத்ரேய ஹொசபளேயின் படத்தை வெளியிட்டிருந்தது. ஊடகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியத்துவத்தை யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது.