‘அடித்துக் கொல்லுதல் என்ற வார்த்தை இந்திய வரலாற்றிலேயே கிடையாது. அது வேறொரு கலாசாரத்தில் இருந்து வந்தது. இந்தியாவை சிறுமைபடுத்த இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்,” என, ஆர்.எஸ்.எஸ். தலைவர், மோகன் பாகவத் கூறினார்.
விஜயதசமியை முன்னிட்டு, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், ஒவ்வொரு ஆண்டும் அதன் தலைவர் உரையாற்றுவார். அதில், நாட்டின் சில இடங்களில், அடித்துக் கொல்லும் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அடித்துக் கொல்லுதல் என்பது இந்திய வரலாற்றில், நமது பாரம்பரியத்தில் கிடையாது. இது வேறொரு மதக் கலாசாரத்தில் தான் உண்டு. இந்தியர்கள், சகோதரத்துவத்தை மதிப்பவர்கள். அடித்துக் கொல்லுதல் என்ற வார்த்தை, மேற்கத்திய நாடுகள் உருவாக்கியது. அதை, இந்தியர்கள் மீது திணிக்காதீர்கள்.
சர்வதேச அளவில், இந்தியாவை சிறுமைபடுத்துவதற்காக, சிலர் மேற்கொண்டுள்ள முயற்சியே, இந்தக் குற்றச்சாட்டுகள். பல்வேறு வெளிநாடுகளில் உள்ளவர்களும், இங்குள்ள சிலரும், பாரத நாடு வலிமை பெறுவதை விரும்பவில்லை. அதை சீர்குலைக்கவே, இந்த முயற்சியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அரசு மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிலர், அரசின் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து கூறும் கருத்துக்களை கூட, திரித்து அதை மோசமாக சித்தரிக்கிறார்கள். இந்த சதியை, இந்தியர்களும், சமூகத்தில் ஆர்வம் உள்ளவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹிந்து தேசம்
பாரதம் என்பது ஹிந்து தேசம் என்ற எங்களுடைய பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்காக, அதன் பெருமைக்காக உழைக்கும் அனைவருமே, ஹிந்துக்கள் தான். ஹிந்துக்கள், மற்றவர்களையும் மதிக்கக் கூடியவர்கள்; மற்ற மதங்களையும் மதிக்கக் கூடியவர்கள்; நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கக் கூடியவர்கள். இதை கேட்கும்போது நமக்கு பெருமையாக இருக்கும். ஆனால், நாம் வலுவாக இருந்தால்தான், உலக நாடுகள் நம்மை மதிக்கும். பாரதம் எனப்படும் இந்தியா, ஹிந்துக்களின் தேசமே. இதை உலக நாடுகளுக்கு உணர்த்திட வேண்டும்.
ஹிந்துக்கள் குறித்து நாம் பேசுகிறோம். ஆனால், சிலர், நாம் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். நம்மை பொருத்தவரை, நாட்டுக்காக உழைக்கும் அனைவரும், அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களை ஹிந்துக்களாகவே பார்க்கிறோம். நாம் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. எங்களை பொருத்தவரை ஒரே ஒரு தர்மத்தையே கடைபிடிக்கிறோம். அது மனித தர்மம். அதுதான், ஹிந்து தர்மம்.
இம்ரானுக்கு கண்டனம்
ஐ.நா., கூட்டத்தில் பேசிய, பாக்., பிரதமர் இம்ரான், ஆர்.எஸ்.எஸ்., தொடர்பாக பேசியுள்ளார். தவறான முயற்சிகளுக்கு பலன் கிடைக்காதபோது, தவறான தகவல்களை தெரிவிக்கலாம் என்ற கொள்கையில், பாக்., உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., குறித்தும் அவ்வாறே, பொய்யான ஒரு தகவலை, இம்ரான் கான் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிகளில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே. சிங், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஷிவ் நாடார்
ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் நடந்த விஜயதசமி நிகழ்ச்சியில், எச்.சி.எல்., என்ற கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், நாட்டின் வளர்ச்சியை, மத்திய அரசால் மட்டுமே உறுதி செய்ய முடியாது. தனிநபர்கள், தனியார் துறையினர், என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்பு ஆகியவையும் தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும். ‘சிக் ஷா’ என்ற அமைப்பின் மூலம், பல்வேறு மாநிலங்களில், ஏழை, எளிய மக்களுக்கு கல்வி அளித்து வருகிறோம். உத்தர பிரதேச மாநிலத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட, 46 சதவீத குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனால், கற்கும் திறன் அவர்களுக்கு குறைவாக இருந்தது.
என்னுடைய மகள், இந்தத் திட்டத்தில் தீவிரமாக உள்ளார். ஊட்டசத்து இல்லாத குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து கிடைப்பதற்கு, என்னுடைய மகள் ஒரு நடவடிக்கை எடுத்தார். அது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர், அந்தக் குழந்தைகளுக்கு, அசைவ உணவு கொடுத்தார். அதேபோல், விவசாயிகளின் மாத குடும்ப வருமானம், 6,500 ரூபாய் என்பதும் தெரியவந்தது. இந்தப் பணத்தில் எப்படி விவசாயத்தையும் கவனித்து, குடும்பத்தையும் கவனிக்க முடியும். இதுபோன்ற மக்களுக்கு உதவிட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
BHARAT MATHA KI JAI