கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் நடந்த, 64வது காமன்வெல்த் பார்லி மாநாட்டில், ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு, இந்திய குழுவினர் பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து, சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச அமைப்புகளில், பாக்., பிரச்னை எழுப்பி வருகிறது. அதற்கு, இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த மாத துவக்கத்தில், மாலத்தீவுகளில் நடந்த, தெற்காசிய பார்லி சபாநாயகர்கள் கூட்டத்தில், காஷ்மீர் பிரச்னையை, பாக்., எழுப்பியது. அதற்கு, இந்திய தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது.
அமெரிக்காவின், நியூயார்க் நகரில், சமீபத்தில் நடந்த, ஐ.நா., பொது சபை கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து, பாக்., பிரதமர் இம்ரான் கான் பேசினார். அதற்கு, ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவைச் சேர்ந்த, இளம் பெண் அதிகாரி விதிஷா மைத்ரா, கடும் கண்டனம் தெரிவித்து, பாக்.,குக்கு சூடு கொடுத்தார்.இந்நிலையில், உகாண்டாவில் காமன்வெல்த் பார்லி மாநாடு நடந்தது. அதில், ‘ஜம்மு – காஷ்மீரில், அதிக அளவு ராணுவத்தை இந்தியா குவித்துள்ளது’ என, பாக்., தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.,க்கள் ரஞ்சன் சவுத்ரி, ரூபா கங்குலி, எல்.ஹனுமந்தையா குழு பதிலடி கொடுத்தது. ரூபா கங்குலி, பாக்.,கில், ராணுவ ஆட்சி தான் பாரம்பரியமாக மாறிவிட்டது. அங்கு, ராணுவத்தின் ஆட்சி, 33 ஆண்டுகள் நடந்துள்ளது. காஷ்மீர் குறித்து பொய் பிரசாரம் செய்வதை, பாக்., நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.