இந்தியப் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பரவலாக எழுந்து வரும் விமர்சனங்களை அடுத்து புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. உலக பொருளாதார மந்தம் என்பது ஒன்றும் புதிது அல்ல. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனாவை விட இந்தியா பொருளாதாரம் நன்றாக உள்ளது. மந்த நிலை என்ற தகவல் தவறானது, என்றார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன் அறிவித்தவற்றின் முக்கிய அம்சங்களில் சில:
*அதிசெல்வந்தர்களுக்கான சூப்பர் ரிச் வரி விலக்கப்படும்.
*தொழில் முனைவோருக்கான ஏஞ்செல் வரியும் விலக்கப்படும்.
*பொதுத்துறை வங்கிகள் மூலம் கூடுதல் கடன் விரிவாக்கம்
சிஎஸ்ஆர் விதிமீறல்கள் குற்றம் என்பது நீக்கப்படும்.
நடுத்தர தொழில்களுக்கான ஜிஎஸ்டி நிதி திருப்பியளித்தல் 30 நாட்களில் செய்யப்படும்.
வாகனப்பதிவுக் கட்டணம் ஜூன் 2020 வரை தள்ளி வைக்கப்படுகிறது.
பிஎஸ் 4 ரக வாகனங்களை அதன் பதிவுக்காலம் வரை பயன்படுத்தலாம்.
* கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும்.
* இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறுசிறு குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும், எளிமைப்படுத்தப்படும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
* ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். நீண்டகால குறுகியகால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது.
* மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, நிதி எண் 2 சட்டம் 2019- ஆல் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீட்டமைக்கப்படுகிறது.
* வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை.
* பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் தரப்படும்.
* ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து, பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.
* கடந்த 2014-ல் இருந்து சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மத்திய அரசின் முதன்மை பணியாக அதுவே உள்ளது, ஜி.எஸ். டி இன்னும் எளிமையாக்கப்படும்.
* கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது. அதற்கு பதிலாக சிவில் குற்றமாகவே கருதப்படும்.
* அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு அனைத்து வருமான வரி உத்தரவுகள், அறிவிப்புகள், சம்மன், கடிதங்கள் போன்றவை மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பு மூலம் வழங்கப்படும்.
* ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும். மத்திய பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும்.
* பொதுத்துறை வங்கிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும். வங்கிகளுக்காக மூலதன உதவி மூலம் கடன் வளர்ச்சி அதிகரிக்கும்.
* வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஒரே நாளில் தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான சூழ்நிலை உள்ளது. சட்ட விதிகள் தொடர்பான அனைத்து சிக்கல்களும் உடனுக்குடன் களையப்படும்
*தொழிற்துறைக்கான நடைமுறை மூலதன கடன்களின் மீதான வட்டியும் இலகுவாக்கப்படும்.