“ஆர்.எஸ்.எஸ். 100 ஆண்டுகள்” என்ற தலைப்பில், 2026 ஜூன் 14 அன்று கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் (அகில பாரத தலைவர்) டாக்டர் மோகன் பாகவத் ஜி உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் நிகழ்த்திய பேருரையின் தமிழ் வடிவம்:
“கடந்த 100 ஆண்டுகளாக, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்
(ஆர்.எஸ்.எஸ்) பாரதத்தின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் சங்கம் உலக நலனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.
அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகவோ, எந்த ஒரு தனிநபர், குழு அல்லது மதத்திற்கு எதிராகவோ
ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மதம், ஜாதி, மொழி அல்லது பிராந்திய வேறுபாடுகளின் அடிப்படையில் யாரையும் வெளிநாட்டவராக ஆர்.எஸ்.எஸ். கருதுவதில்லை, “அனைவரும் ஒன்றே” என்பதே சங்கப் பார்வை என அவர் குறிப்பிட்டார்.
“ஹிந்துத்துவம்” என்பது பாரதத்தில் வாழும் பாரம்பரியத்தைக் குறிக்கும் சொல் என்றும், அந்தப் பொருளில் அனைவரும் ஹிந்துக்களே என்றும் அவர் விளக்கினார். எந்த மதத்தை / எந்த வடிவிலான இறை நம்பிக்கையை பின்பற்றுபவர்களும், இந்த பண்பாட்டு அர்த்தத்தில் ஹிந்துக்களே என அவர் தெரிவித்தார்.
மனித வாழ்க்கையின் இயல்பான அம்சமாக பன்முகத்தன்மை விளங்குகிறது. அந்தப் பன்முகத்தன்மைக்கு இடையில், மக்களை ஒன்றிணைக்கும் சக்தியே “தர்மம்” என அவர் கூறினார். உலக நலனுக்கு வழிவகுக்கும் மானுடப் பண்புகளின் தொகுப்பே ஹிந்து தர்மம் என்றும், வலிமை; அதுவே பாரத ஒற்றுமையின் அடித்தளம் என்றும் விளக்கினார்.
உண்மை, கருணை, தூய்மை, தவம் ஆகிய நான்கும் தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் என அவர் குறிப்பிட்டார். “தர்மம்” என்பது எந்தவொரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையுடனும் தொடர்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.
இத்தகைய உயர்ந்த பண்புகளை உடைய மனிதர்களை, சமுதாயத்தில் உருவாக்கும்போது மட்டுமே, நேர்மறையான சமுதாய மாற்றம் ஏற்படும். “ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். பணியின் நோக்கம்” என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு யாரும் அந்நியர் அல்லர்; அனைவரும் ஹிந்துக்களே” என்ற கருத்தையும் அவர் இந்த உரையின் போது வலியுறுத்தினார். “ஒவ்வொரு பகுதியிலும் இத்தகைய நற்பண்புகள் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே நமது சங்கப் பணியின் நோக்கம்”.
மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமான அன்றாடச் செயல்பாடு, அதன் “ஷாகா” (Shakha). தினமும் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். ஷாகா பயிற்சிகள் / செயல்பாடுகளின் மூலம் உருவாகும் நபர்கள், சமுதாய மாற்றத்திற்காக பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் நடைபெறும் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், சுயாதீனமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன; அவற்றை ஆர்.எஸ்.எஸ். நேரடியாகக் கட்டுப்படுத்துவதில்லை.
“சேவா பாரதி” போன்ற அமைப்புகளும் தனித்துவமாகச் செயல்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். வழங்கும் சிந்தனைத் தூண்டுதல் (Ideological Inspiration) தவிர, பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளில் வேறு எந்தவித கட்டுப்பாடும் செலுத்தப்படுவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
தனது உரையின் நிறைவில், டாக்டர் மோகன் பாகவத், “ஆர்.எஸ்.எஸ்.ஸை வெறுமனே வெளியிலிருந்து நின்று விமர்சிப்பதன் மூலம் புரிந்துகொள்ள முடியாது. யார் வேண்டுமானாலும் வந்து பார்த்து, அதன் செயல்பாடுகளை உள்ளிருந்து அறிந்து கொள்ளலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸை அதன் செயல்பாடுகள் மூலமும், அதன் ஸ்வயம்சேவகர்களின் வாழ்க்கை முறையின் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.
“ஹிந்துத்துவம் என்பது வெறும் ஒரு மதம் அல்ல; அது பாரதத்தின் உயிரோட்டமிக்க நாகரிகப் பாரம்பரியம் ஆகும். இந்த பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத அங்கங்களாக கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் உள்ளனர்” என்று அவர் கூறினார். சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று சங்கம் வேறுபாடு கருதுவதில்லை; அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
“நமது பண்பாடு அரசை மையமிட்டதல்ல; அதற்கு சமுதாயமே மையம். நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் வாழ்ந்து, அனைவரின் நலனுக்காக தன்னலமின்றி பணியாற்றுபவர் எவராயினும், அவர் ஒரு ஸ்வயம்சேவகரே. ஆர்.எஸ்.எஸ்.ஸில் முறையான உறுப்பினர் சேர்க்கை முறை கிடையாது”.
ஆர்.எஸ்.எஸ். குறித்து நிலவும் பல்வேறு தவறான புரிதல்களைப் பற்றிப் பேசிய அவர், “வாருங்கள், எங்களைப் பாருங்கள், எங்களைப் புரிந்து கொள்ளுங்கள்; அதன் பிறகு எங்களைப் பற்றிய உங்கள் கருத்தை உருவாக்குங்கள்” என்றார். அமைப்பின் பணிகளையும், அதன் ஸ்வயம்சேவகர்களின் வாழ்க்கையையும் நேரடியாக கண்டுணர்வதன் மூலமே ஆர்.எஸ்.எஸ்.ஸை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஆர்.எஸ்.எஸ், பொதுமக்களிடையே பரவலான ஏற்றுக்கொள்ளுதலைப் பெற்று வரும் நிலையில், அதன் எதிர்ப்பாளர்கள் அமைப்பின் சட்டப்பூர்வ நிலை மற்றும் பதிவு (Registration) தொடர்பாக கேள்விகளை எழுப்பி, அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர்.
கடந்த 100 ஆண்டுகளில்,
ஆர்.எஸ்.எஸ். தனது சட்டப்பூர்வ நிலையை பலமுறை பல்வேறு தளங்களில் விளக்கியுள்ளது. இருப்பினும் இத்தகைய கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு, மக்களிடையே குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றன.
கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே,
“ஆர்.எஸ்.எஸ். பதிவு செய்யப்பட வேண்டும் என்று பேசியதற்கு பதிலளித்த சர்சங்கசாலக், “கடந்த நூறு ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். பதிவு செய்யப்படாமலேயே செயல்பட்டு வருகிறது; இனியும் அதேபோல்தான் செயல்படும். பதிவு கோரிக்கை என்பது முற்றிலும் அரசியல் நோக்கமுடையது; அந்த கோரிக்கை நீடிக்கப் போவதில்லை” என்றார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் சட்டபூர்வ நிலை குறித்தும் பதிவு குறித்தும் விளக்கமளித்த ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் (அகில பாரத தலைவர்) டாக்டர் மோகன் பாகவத் தொடர்ந்து கூறியதாவது:
“இதற்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை, பதிவு செய்யப்படாத பல அமைப்புகள் நாட்டில் இயங்கி வருகின்றன. நாங்கள் ரகசியமாக செயல்படவில்லை, இது முதல் முறையாக எழுப்பப்படும் கேள்வியும் அல்ல. 1925-ல், ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. அப்போது எங்களுக்கு எதிராக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியிடமே சென்று பதிவு செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
சுதந்திரத்திற்குப் பிறகு பாரதத்தில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், பதிவு செய்வதை கட்டாயமாக்கவில்லை. பதிவு செய்யப்படாத தனிநபர்களின் அமைப்புகளுக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாங்கள் ‘தனிநபர்களின் அமைப்பு’ (Body of Individuals) என்ற சட்டப்பிரிவின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உள்ளோம். வருமான வரித்துறை வரி செலுத்துமாறு எங்களிடம் கேட்டது, அது தொடர்பாக வழக்கும் நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் எங்களை ‘தனிநபர்களின் அமைப்பு’ என்று அங்கீகரித்தது. அதன்படி எங்களது குரு தட்சிணை வரிவிலக்கிற்குத் தகுதியானது எனத் தீர்மானிக்கப்பட்டது.
“நாங்கள் வெளிப்படையாகவே செயல்படுகிறோம், மக்களை அழைத்து சங்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறோம். இவை அனைத்தும் அரசியல் நோக்கத்துடன் செய்யப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பழகிப்போய் விட்டோம். ஹிந்து தர்மம் பதிவு செய்யப்படவில்லை. பல விஷயங்கள் பதிவு செய்யப்படவில்லை. அரசு எங்களைத் தடை செய்த காலங்களும் இருந்தன. ஒருமுறை நீதிமன்ற உத்தரவின் மூலமும், மற்றொரு முறை சத்தியாகிரகப் போராட்டத்தின் மூலமும் அந்தத் தடைகள் நீக்கப்பட்டன. எனவே
ஆர்.எஸ்.எஸ். இருப்பது அரசு நன்கு அறிந்ததே. தடை விதித்ததே அதன் இருப்பை அங்கீகரித்ததற்கான சான்றாகும்.
“ஒருபுறம் சங்கத்தின் பணிகளைத் தடுக்கவும், மறுபுறம் மக்களின் மனதில் சந்தேகங்களை உருவாக்கவும் சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் இன்று அது சாத்தியமில்லை. ஏனெனில் மக்கள் எங்களை நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
“எங்களை ரகசிய அமைப்பு எனக் கூறுகின்றனர். ஆனால் எங்களுடைய காரியகர்த்தர்கள் எல்லா பகுதிகளிலும் வாழ்கிறார்கள், மக்கள் அவர்களை தினமும் பார்க்கிறார்கள். எங்களுடைய ஷாகாக்கள் திறந்த வெளிகளில் நடைபெறுகின்றன. பொதுமக்கள் அவற்றைக் காண்கிறார்கள். எங்களுடைய நிகழ்ச்சிகளும் பொதுவெளியிலேயே நடத்தப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.
தமிழில்: திவ்யா இரா.கு.,
முனைவர் பட்ட ஆய்வாளர்