சட்டவிரோத குடியேற்றம் அகற்றுதல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்றவற்றால் தேசப் பாதுகாப்பு குறித்து புதிய எழுச்சி உருவாகிறதா? மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, பாரத எதிர்காலத்தை மாற்றுமா? இதைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் சேகர் ஐயர் இந்த இதழில் விவரிக்கிறார்.
அண்டை நாடுகளிலிருந்து மக்கள் எந்தவித குடியேற்றச் சோதனைகளும் இன்றி, எல்லைகளைத் தாண்டி வர அனுமதிக்கும் நாடுகள், உலகில் எத்தனை இருக்கின்றன? உலகின் ஒவ்வொரு நாடுகளும் “வலுவான எல்லைகளே வலுவான தேசத்தின் அடித்தளம்” என்று நம்புகிறது. ஆனால் நமது நாட்டில், கடந்த ஏழு தசாப்தங்களாக தேர்தல் அரசியலின் கட்டாயங்கள் காரணமாக, சட்டவிரோத குடியேற்றம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. அதன் விளைவாக தேசியப் பாதுகாப்பு, மக்கள்தொகைச் சமமற்ற நிலை மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
ஆனால் கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த சம்பவங்கள், இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கியுள்ளன. வங்கதேசத்திலிருந்து நடைபெறும் சட்டவிரோத குடியேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தில் பாஜக பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மேலும் ஊடுருவலால் ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்ய மோடி அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு ஆகியவை இந்த மாற்றத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இன்று மேற்கு வங்கத்தில் 4,000 முதல் 5,000 வரையிலான வங்கதேச சட்டவிரோத குடியேற்றவாசிகள், குடும்பங்களுடன் எல்லைப் பாதுகாப்புப் படை சோதனைச் சாவடிகளின் முன்பு, வரிசையில் நிற்கும் காட்சிகள் காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக பாரதத்தில் தங்கியிருந்த வங்கதேச சட்டவிரோத குடியேற்றவாசிகள், மாநிலத்தின் அரசியல் சூழல் இனி தங்களது சட்டவிரோத தங்குதலுக்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்து, தமது தாய்நாட்டிற்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். கடந்த காலத்தில் இத்தகைய காட்சிகள் அரிதாகவே காணப்பட்டன. இன்று அது ஒரு அரசியல் மற்றும் நிர்வாக மாற்றத்தின் வெளிப்பாடாக மாறியுள்ளது.
இந்த நபர்களில் பலர் சட்டவிரோதமாக பாரதத்திற்குள் நுழைந்து, பல ஆண்டுகளாக பாரத குடிமக்களைப் போலவே வாழ்ந்து வந்தனர். சிலர் பல தசாப்தங்களாக இங்கு வசித்து, வேலை செய்து, போலி ஆவணங்களின் உதவியுடன் ஆதார் அட்டைகள், பான் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றனர். சிலர் அரசு நலத்திட்டங்களின் பலன்களையும் அனுபவித்தனர். இந்த நிலை ஒரே நாளில் உருவானதல்ல. பல ஆண்டுகளாக அரசியல் ஆதரவும், நிர்வாக அலட்சியமும் இணைந்து உருவாக்கிய விளைவுதான் இது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஏற்பட்ட ஆட்சிமாற்றம் இந்த சூழலை முற்றிலும் மாற்றியது. மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பதவியேற்ற உடனேயே “கண்டறி – நீக்கு – நாடுகடத்து” (Detect, Delete, Deport) என்ற கொள்கையை அறிவித்தார். சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகங்கள் ஆவணமற்ற குடியேற்றவாசிகளை அடையாளம் காணத் தொடங்கின. நாடு கடத்தலுக்கு முன் அவர்களை தங்க வைக்க சிறப்பு மையங்களும் உருவாக்கப்பட்டன.
சுவேந்து அதிகாரி வெளிப்படையாக எச்சரித்தார்: “அவர்கள் வங்கதேசத்தவர்கள். அவர்களை அவர்களது நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்காக நமது நாடு உணவு, உடை, மருந்து செலவுகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும்; இல்லையெனில் அரசு செய்ய வேண்டியதைச் செய்யும்”.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம் என்பது எல்லைப் பாதுகாப்பு பிரச்சினை மட்டுமல்ல. அது மக்கள்தொகை அமைப்பு, பொது வளங்களின் பகிர்வு, வேலை வாய்ப்பு, சட்டம் – ஒழுங்கு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய அனைத்துடனும் தொடர்புடையது. பாதுகாப்பு அமைப்புகள் பல ஆண்டுகளாக மனிதக் கடத்தல், மாடுக் கடத்தல், குற்ற வலையமைப்புகள் மற்றும் சில சமயங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து எச்சரித்து வந்தன. எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டன.
பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில், “சட்டவிரோத குடியேற்றம், எல்லைப் பாதுகாப்பு மற்றும் மக்கள்தொகை மாற்றம்” ஆகிய மூன்று அம்சங்களை தொடர்ந்து முன்வைத்தது. மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள் அந்தக் கேள்விகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதை காட்டுகின்றன.
ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்துவதில் போதுமான உறுதியைக் காட்டவில்லை. தேசிய பாதுகாப்பை விட, தேர்தல் அரசியலுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்தது. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, மாநில அரசு தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதோடு, மத்திய அரசுடன் தேவையான ஒத்துழைப்பையும் வழங்க தவறிவிட்டது.
2025 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வங்கதேச மற்றும் ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களை அடையாளம் காணும் வழிகாட்டுதல்களும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, திருணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்பாடின்றி வளர்ந்தது என்ற குற்றச்சாட்டு மேலும் வலுப்பெற்றது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகப்பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் ஒருவரின் குடியுரிமையை தேர்தல் ஆணையம் சரிபார்க்கும் அதிகாரம் கொண்டுள்ளது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு அடிப்படை உண்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் நமது நாட்டில் வாக்காளர்களாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் நமது நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையே பாதிக்கப்படும்.
சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின் போது, தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கருவியாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ராகுல் காந்தி “வோட் சோரி” (Vote Chori) என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். மம்தா பானர்ஜியும் தேர்தல் ஆணையம் பாஜகவின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறினார். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, அந்த குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு நிலைத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
மேலும், சில வங்கதேச ஊடுருவல்காரர்கள் போலி தகவல்களின் அடிப்படையில் ஆதார், பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றதாகவும், திருணமூல் காங்கிரஸ் தலைவர்களின் உதவியுடன், நமது நாட்டின் பல பகுதிகளில் குடியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளிப்பாடுகள் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாரத எல்லைப் பாதுகாப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் பார்டர் (Smart Border) திட்டம், செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு, ட்ரோன்கள், வெப்ப உணர்வு கருவிகள் மற்றும் பாரத எல்லைப் பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரங்கள், இந்த முயற்சியின் முக்கிய அம்சங்களாக உள்ளன. ஒரு வலுவான தேசம், பாதுகாப்பான எல்லைகளிலிருந்து தொடங்குகிறது என்பதே மோடியின் அணுகுமுறை.
அதனால்தான் எல்லைப் பாதுகாப்பு, ஆவண சரிபார்ப்பு மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கொள்கையாக மாற்றப்பட்டு உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களும் சிறப்பு பணிக்குழுக்களை அமைத்து, சட்டவிரோத குடியேற்றவாசிகளை அடையாளம் காணவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. நாடு கடத்தப்படும் வரை அவர்களை தங்க வைக்க உயர் பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் மோடி அரசின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரதத்தின் குடியேற்றம் மற்றும் தேசியப் பாதுகாப்பு அணுகுமுறையில், ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.
பாரதத்தின் எல்லைகள் பாரதியர்களுக்காகவே பாதுகாக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்ததாகக் கருதப்பட்ட ஒரு பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ளும் முயற்சியாக தற்போதைய மாற்றங்களை நாம் பார்க்கின்றோம். பாரதத்தின் பாதுகாப்பு, ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை மற்றும் எதிர்கால மக்கள்தொகை சமநிலை ஆகியவற்றை தீர்மானிக்கும் விவாதமாக, இந்தப் பிரச்சினை மாறியுள்ளது. வருங்காலத்தில் இந்த அணுகுமுறை எவ்வளவு வெற்றி பெறும் என்பது பாரத அரசியலிலும், தேசிய பாதுகாப்பு விவாதங்களிலும் மிக முக்கியமான கேள்வியாக இருக்கும்.
கட்டுரையாளர்: ஹிந்துஸ்தான் டைம்ஸ், டெக்கான் ஹெரால்ட் போன்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ந்து 45 வருடங்கள் பணியாற்றிய டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் – சேகர் ஐயர்
தமிழில்: டாக்டர் சுபா