நாளுக்கு நாள் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. அதிக தண்ணீர் தேவை கொண்ட நெல், கோதுமை உள்ளிட்டவற்றை பயிரிடுவது, எதிர்காலத்தில் மிகவும் சிரமமாக மாறிவிடும். கோதுமை, அரிசி ஆகியவை அருகிக் கொண்டே வந்தால், உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடைய வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வுகாண தொலைநோக்குப் பார்வையுடன், இப்போதே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உணவு பழக்கத்தையும், மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் மைதா, பரோட்டாதான் நுகர்வோரிடையே பிரபலமாக உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்ற போதிலும், இந்த வலைக்குள் சிக்குண்டு மீள முடியாமல் ஏராளமானோர் தவிக்கிறார்கள் என்பதே இன்றைய நிலவரமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர முயற்சியை அடுத்து, 2023ம் ஆண்டை `சிறுதானியங்கள் ஆண்டு` என ஐ.நா. சபை பிரகடனப்படுத்தியது. இது உலகளாவிய விழிப்புணர்வை வலுப்படுத்தியது. தமிழ்நாட்டில் சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்டவை முக்கியமான சிறுதானியங்களாகும். இந்த சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இரும்புச் சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் இந்த சிறுதானியங்களில் செறிந்துள்ளன.
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, சிறுதானியங்கள் உதவுகின்றன. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக சிறுதானியங்கள் விளங்குகின்றன. சிறுதானியங்களை நன்கு சந்தைப்படுத்த விரிவான ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். சிறுதானியங்களின் உற்பத்தி அதிகரித்தால்தான் அவற்றைப் பரவலாக்க முடியும். விலையும் ஓரளவு குறையும்.
மாநில அரசு சிறுதானியங்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
சிறுதானியங்கள் உதாசீனப்படுத்தப் படுகின்றன. சிறுதானியங்களைப் பயிரிடும் விவசாயிகளின் நிலையும் திருப்திகரமாக இல்லை. குறைந்தபட்சம் வாரம் இரண்டு முறையாவது, சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என நுகர்வோர் முடிவு செய்தால் ஆரோக்கிய ரீதியாகவும், விவசாய ரீதியாகவும் அபார மாற்றம் நிகழும்.
ரேஷனில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குக்கிராமம் வரை ரேஷன் கடைகள் இயங்குகின்றன. ரேஷன் கடைகள் வாயிலாக பொருட்களை விநியோகித்தால், அனைத்து தரப்பினரும் பயனடைய வழிவகை பிறக்கும். ரேஷனில் எல்லா சிறுதானியங்களையும் ஒரே நேரத்தில் வழங்குவது சாத்தியமில்லை. எந்தெந்த காலத்தில் எந்தெந்த சிறுதானியம் பெருமளவு கிடைக்கிறதோ அதை வழங்க முற்படுவது விரும்பத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.
சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. இதையடுத்து, சில நாட்களுக்குள் புதிய அரசு பதவியேற்கும். அந்த அரசு, ரேஷனில் சிறுதானியங்களை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுநல ஆர்வலர்களின் விருப்பமும், எதிர்பார்ப்புமாகும்.