ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய குடும்பத்தில் பிறந்த போதும், தனது குடும்பத்தைவிட, சமுதாயப் பணியே முக்கியம் என வாழ்ந்து, இந்து முன்னணி அமைப்பிற்கு தமிழகத்தின் தலைவராக இருக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
சின்னச்சாமி -− செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பாளையம் என்ற சிறிய கிராமத்தில், 1956 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பத்தாம் தேதி பிறந்தார், காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி. அவருடன் பிறந்தவர் ஒரு அண்ணன். ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் படித்தார்.
எமர்ஜென்சியின் கோரத் தாண்டவத்திற்கு பிறகு, திருப்பூரில் சங்க ஸ்வயம்சேவகர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. அதில் சங்கப் பிரச்சாரக் சூரிய நாராயணராவ் ஜியின் சிறப்புரை இருந்தது. அதில் கலந்து கொண்டு, உரையை கேட்டபின், சங்கத்தின் மீது தீவிர ஈடுபாடு வந்து சங்கத்தில் சேர்ந்தார்.
அப்போது அந்த ஜில்லாவின் பிரச்சாரக்காக இருந்த சுதாகர் ஜி, கம்யூனிஸத்தைப் பற்றிய இரண்டு புத்தகங்களை வழங்கி படிக்குமாறு கூறினார். “கம்யூனிஸ்ட் உரைகளில் கம்யூனிசம்”, “தோற்றுப் போன மார்க்சியம்” என்ற அந்த இரண்டு புத்தகங்களை படித்த பின்னர், கம்யூனிசத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு, சங்கப் பணியை தொடர்ந்து செய்தார். அப்போதைய கோவை கோட்ட சங்கப் பிரச்சாரக்கான பத்துஜியுடன் நெருங்கிப் பழகி, சங்கத்தை பற்றி மேலும் தெரிந்து கொண்டார். தாலுகா கார்யவாஹ்காக சங்கப் பொறுப்பேற்று, சங்கப் பணியை செய்தார். அப்போது சுற்றுப்பயணம் வந்த இராம கோபாலன் ஜியை சந்தித்து, சங்க வேலை செயல்முறையைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டார்.
திருப்பூர் முழுக்கவே ஆடைகள் தொடர்பான தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அங்கு கம்யூனிசத்தின் ஆதிக்கத்தாலும், சில கம்யூனிஸ்டுகளின் தொடர் போராட்டத்தாலும், தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வந்தன. அதன் எதிரொலியாக, பலர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். இதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் கவலை கொண்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி, கம்யூனிசத்தையும், தேவையில்லாத கம்யூனிசப் போராட்டங்களையும் எதிர்த்து, சங்க சார்பில் தொழிலாளர்களிடையே பணிகளை செய்தார். இதன் மூலம் தோழர்களின் கோட்டையாக இருந்த திருப்பூர், சங்கக் கோட்டையாக மாறியது.
இதனால் கம்யூனிஸ்டுகள் கோபம் கொண்டு, பல வழக்குகளை அமைப்பின் மீதும், ஜியின் மீதும் போட்டனர். எனினும் மனம் தளராது, அதனை சட்ட ரீதியான முறையில் எதிர்கொண்டு, தேவைற்ற கம்யூனிஸ்ட் போராட்டங்களை தடுத்து நிறுத்தியதுடன், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அமைப்பின் பணியும் செய்து வந்தார்.
1989ல், அப்போதைய கோவை கோட்ட பிரச்சாரக்காக இருந்த முருகானந்தம் ஜியின் அழைப்பின் பேரில், ஹிந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச “இந்து முன்னணி” பொறுப்பை ஏற்றார். ஆரம்பத்தில் திருப்பூர் நகர் அமைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து, பின்னர் கோவை மாவட்ட பொதுச் செயலாளர், தமிழகத்தின் மாநிலச் செயலாளர், தமிழக பொதுச் செயலாளர் என பல பொறுப்புகள் வகித்து, தற்போது தமிழகத்தின் இந்து முன்னணி தலைவராக செயல்பட்டு வருகிறார்.
2011ல், திருப்பூரில் சாயப்பட்டறையில் இருந்து வெளிவரும் கழிவுநீரால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் உடல்நலத்தையும் காத்து, தொழிலாளர்களையும் காக்கும் வகையில், “தொழில் பாதுகாப்புக் குழு” என்ற ஒரு அமைப்பை நிறுவி, அதன் மூலம் தொழிலாளர்களுக்கும், தொழில் நடத்தும் முதலாளிகளுக்கும் பாலமாக இருந்து, அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நல்லபடியாக வியாபாரம் பெருகி, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட பெரிதும் முயன்றார். அரசு உதவியுடன், இத்தகைய முயற்சிகளின் மூலம் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது. திருப்பூரில் இந்து முன்னணியின் வாரக் கூடுதல், மாதக் கூடுதல் கணிசமான அளவில் அதிகரித்து, அமைப்புக்கு மக்கள் நாடி, தேடி வந்தனர்.
தமிழகம் முழுக்க உள்ள கோயில்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதனை தட்டி கேட்பதுடன், மக்களை ஒன்றுதிரட்டி, இந்து முன்னணி சார்பில் போராட்டங்களை மேற்கொள்வார். கோயில் வழிபாட்டு முறையில், ஏதேனும் தவறுகள் நடந்தால், அதை முன்னின்று தட்டி கேட்டு, பக்தர்களுக்கான நியாயத்தை பெற்றுத் தருவார். திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து, பல போராட்டங்கள் நடத்தி, இந்து முன்னணியின் தொடர் பணிகளால் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மிகப்பெரிய “முருக பக்தர்கள் மாநாடு” நடைபெற்றது. அதற்கு முன்னின்று, பல வேலைகளை செய்தார்.
தமிழகத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், ஹிந்து சமய பக்தர்களுக்கு, கோயில்களுக்கு ஆதரவாகவும் பல போராட்டங்களை நடத்தி, மக்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்த்துவைக்க, இந்து முன்னணி சார்பில் போராடி தீர்த்து வைப்பார்.
முதலாம் ஆண்டு சங்க பயிற்சி முகாமை முடித்த காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி, மரம் அறுவை மில் வேலையில் இருந்தார். தற்போது சொந்தமான பனியன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 1978ல், சாந்தாமணி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தங்கராஜ் என்ற மகனும், சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர். திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், கவுன்சிலராக தங்கராஜ் ஜி உள்ளார்.
சங்கத்தின் பல மூத்த அதிகாரிகள், அகில பாரத பொறுப்பாளர்கள், பிராந்த, ஷேத்ர பிரச்சாரக்குகள் என பலரும் காடேஸ்வரா ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். சாதாரண தொண்டராக இந்து முன்னணியில் இணைந்து, தற்போது அந்த அமைப்பிற்கு தமிழகத்தின் தலைவராக இருக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.