தாய் மொழி தரும் தீர்வு

நமது தாய்மொழியை மதித்து பாதுகாப்பது அவசியம். பாரதத்தில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஒருமைப்பாடு பல்வகை தன்மையில்தான் உள்ளது. பல மொழி சமூகங்கள் தங்கள் பாரம்பரிய அறிவையும், பண்பாடுகளையும் மொழி வழியாக பாதுகாக்கின்றன.
சமுதாயத்தின் நிலைத்த மேம்பாட்டை சாதித்திட பண்பாட்டு மற்றும் பன்மொழி வகையின் முக்கியத்துவத்தை யுனெஸ்கோ வலியுறுத்துகிறது. பண்பாடுகளிலும், மொழிகளிலும் உள்ள வேறுபாடுகளைப் பாதுகாப்பது சகிப்புத்தன்மையையும், பரஸ்பர மரியாதையையும் வளர்க்கிறது.
இன்றைக்கு மொழிகள் வளர்ச்சியில், அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதில், உள்ளடக்கிய அறிவு சமுதாயங்களை உருவாக்குவதில், பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாப்பது மற்றும் நிலைத்த வளர்ச்சிக்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நன்மைகளை பயன்படுத்த அரசியல் மனப்பாங்கை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
தாய்மொழி என்றால் என்ன? அது நமது சொந்த மொழி. பெற்றோரும், முன்னோர்களும் பேசிய மொழி. அதில் நாம் நம்மை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆனால் நமது பிள்ளைகளை, அதை பேச செய்வதில் நாம் போராடுகிறோம். முன்பு தாய்மொழி என்பது வீட்டில் பேசப்படும் மொழியாக இருந்தது. இன்று வேறு மொழி பேசுவோருடன் திருமணம் செய்து கொள்கிறோம். மேலும் ஆங்கிலம் போன்ற வெளிநாட்டு மொழிகளைப் பேச ஆரம்பித்துள்ளோம்; அது பொது மொழியாக மாறியுள்ளது. ஆங்கிலம் கற்பித்தால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பொதுவான எண்ணமாகியுள்ளது. ஆனால் இது ஆரோக்கியமான போக்கு அல்ல. அறிவியல் கூறுவதாவது, குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்மொழி மிகவும் அவசியம்; அது எதிர்காலத்தில் சிறந்த விளைவுகளை வழங்குகிறது.
தாய்மொழி வழிக்கல்வி குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி, பிரச்சினை தீர்க்கும் திறன், நினைவாற்றல் மேம்பாடு, எளிதான புரிதல், அதிக ஈடுபாடு, நீண்டநாள் நினைவூட்டல், நம்பிக்கை உயர்வு மற்றும் பொருளாதார & தொழில் வாய்ப்புகள் – வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, தன்னம்பிக்கை வளர்ச்சி இவையனைத்தும் வழங்கி, சமூக வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது.
ஆரம்பப் பள்ளிக் கல்வி முழுவதும் தாய்மொழியில் கற்பிக்கப்பட்டாலும், கற்றலில் குழந்தைகளின் திறன் பாதிக்கப்படாது என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன. பல மொழித்திறன் மூலம் உலக பார்வை விரிவு அடைகிறது, மொழிகள் ஏன் அழிகின்றன?
பொதுவாக வறுமை, இடம் பெயர்வு, வேலை இழப்பு மற்றும் மொழியியல் அமைப்பு மாற்றங்கள் முக்கிய காரணங்கள் ஆகும். ஒரு மொழி அழிந்தால் என்ன நடக்கும்? நாம் ஒரு மொழியை இழக்கும் போது, வெறும் உரையாடல் தொடர்பை மட்டுமல்ல; நமது அறிவையும், அனுபவத்தையும் இழக்கிறோம். உள்ளூர் தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய முக்கிய தகவல்களையும் இழக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு அறிவு கடத்தப்படவில்லை என்றால் அறிவியல், பண்பாடு எப்படி முன்னேறும்? ஒரு மொழி அழியும் போது, தனித்துவமான உலகக் கண்ணோட்டத்தையும் இழக்கிறோம்.
தாய்மொழியை பாதுகாக்க
வேண்டிய காரணங்கள்:
1. அனைவரையும் உள்ளடக்க முன்னேற்றம் பெற
2. யாரும் புறக்கணிக்கப்படாமல் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய
3. அழிந்து வரும் இலக்கியங்களை காப்பாற்ற
4. குடும்ப பாரம்பரியத்தை பாதுகாக்க
நாம் என்ன செய்யலாம்?
1. பெற்றோராக இருந்தால், உங்கள் பிள்ளைகளுடன் தாய் மொழியில் பேசுங்கள்.
2. உங்கள் மொழியில் கதைகள் படியுங்கள்.
3. அதே மொழியில் சிறுவர் பாடல்கள் பாடுங்கள்.
4. ஆசிரியராக இருந்தால், மொழி சார்ந்த பாடத் திட்டத்தைக் கோருங்கள்.
5. ஆரம்பக் கல்வியில் தாய் மொழிக்குச் சிறப்பு முக்கியத்துவம் கொடுங்கள்.
நடைமுறையில், பிராந்திய மொழிகள் மூன்றாவது மொழியாக மட்டுமே கற்பிக்கப்பட்டு, வாரத்திற்கு 60 முதல் 90 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 8 ஆம் வகுப்பிற்குப் பிறகு அவை நிறுத்தப்படுகின்றன. தேசிய மொழிகளும் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு நிறுத்தப்படுகின்றன. ஆங்கிலமே முக்கிய கவனமாகிறது. இதை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாய் மொழிகள் பாரதத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் மறைந்து வருகின்றன. உலகளவில் 40% மக்கள் தாங்கள் பேசும் அல்லது புரிந்துகொள்ளும் மொழியில் கல்வி பெற முடியவில்லை. இதன் விளைவாக சிறுபான்மை மக்கள் பள்ளிகளைத் தவிர்க்கிறார்கள்
தேசிய கல்விக் கொள்கை 2020
தேசியக் கல்விக் கொள்கை 2020, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தாய் மொழி / உள்ளூர் மொழியில் கற்றல் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. குறைந்தது 5ஆம் வகுப்பு வரை, விருப்பமாக 8ஆம் வகுப்பு வரை, வீட்டுமொழி / தாய்மொழி / உள்ளூர் மொழி கற்பித்தல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. தாய் மொழியில் கற்பது, மாணவர்களுக்கு மொழி தடையின்றி, புதுமையாக சிந்திக்க இயல்பான சூழலை வழங்கும் என்று குறிப்பிடுகிறது.
இந்த வழிகாட்டுதல்களை நடைமுறையில் கொண்டுவர, மத்திய அரசு அரசியலமைப்பின் எட்டாம் அட்டவணையில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் (ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், பஞ்சாபி, ஒடியா, அஸ்ஸாமி, மலையாளம் மற்றும் உருது) பாடநூல்கள் அச்சிடப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம், உயர்கல்வியை பிராந்திய மொழிகளில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக கல்வி நூல்களை தயாரித்தல், மொழி பெயர்த்தல் மற்றும் குறிப்பாக தொழில்நுட்ப — பாடங்களுக்கு வெளியிடுதல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சி, பல்கலைக்கழகங்களில் தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்கும் ஒரு பரந்த தேசிய முயற்சியின் பகுதியாகும்.
சர்வதேச ‘தாய்மொழி தினம்’ வங்காள மொழிக்காக 1952ல் உயிர் தியாகம் செய்த மாணவர்களை நினைவுகூரும் நாளாகும். 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பிப்ரவரி 21-ஐ சர்வதேச தாய்மொழி தினமாக இதனை அறிவித்தது.