விஜில் நிகழ்வில் சீமான்

 

சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருந்தாலும் “தமிழ்” என்ற புள்ளியிலே இணைந்த நிகழ்வு இது. தேசிய சிந்தனை பேரவை அமைப்பின் அங்கமான விஜில், 2025 நவம்பர் 11 அன்று, பாரதி பிறந்தநாள் நிகழ்வை நடத்தியது.

“பாரதி கண்ட வந்தே மாதரம்” எனும் இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அவருடன் பாரதியின் வழித்தோன்றலான கவிஞானி வைரபாரதி கவியுரை நிகழ்த்தினார். தேசிய சிந்தனை பேரவை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

“பாரதி காசியில் வாழ்ந்த காலத்தில் மதன் மோகன் மாளவியா மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் இருவரையும் சந்தித்தார். வங்காளத்தில் மிகப்பெரிய புரட்சி கோஷமாக இருந்த ‘’வந்தே மாதரம்’’ குறித்து அவர்களிடம் பேசியுள்ளார் என்கிற வரலாற்றுக் குறிப்பு உள்ளது.

காங்கிரஸ் மாநாட்டுக்காக வாரணாசி சென்ற பொழுது, அங்கே சகோதரி நிவேதிதையை சந்தித்து, அவரை தனது ஆன்ம குருவாக பாரதி ஏற்றார். வங்காளத்துக்கு அடுத்ததாக அதிகமான புரட்சி வீரர்கள் உருவானது தமிழகத்தில் தான். லால், பால், பால் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகிய மூவரும், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் நேரடி போராட்டக் கொள்கைக்கு வழி வகுத்தவர்கள். இந்த மூவரும் முன்னெடுத்த கோஷம் வந்தே மாதரம்.


“இந்த மூவரைப் போலவே தமிழகத்திலும், சுதந்திரப் போராட்டத்தில் மும்மூர்த்திகள் இருந்தனர். வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு ஐயர் ஆகிய இந்த மூவரும் புரட்சி இயக்கத்தின் மூலமாக தீவிரமான சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்கள். இவர்களுக்கு தாரக மந்திரமாக அமைந்தது வந்தே மாதரம்.

வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்து, அந்த சுதந்திரக் கனலுக்கு நெய்யூற்றி கொழுந்து விட்டு எரியச் செய்தவர் பாரதி” என்று கிருஷ்ணன் கூறினார். அவரைத் தொடர்ந்து, கவிஞானி வைரபாரதி “அந்த ராமன் மானை தேடினான் கிடைக்கவில்லை. இந்த ராமன் தேடி ஒரு மான் கிடைத்துவிட்டது அதுதான் சீமான்.

இன்று தேசிய சிந்தனை பேரவையின் சென்னை, புதுவை அமைப்பாளர் ராம்குமார் அழைத்தவுடன் தான் இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டது குறித்து கவிநயத்தோடு தனது உரையை துவங்கினார். “செய்க தவம் என்று கூறியவன் பாரதி. பாரதிக்கு முன்னால் தியானம் செய்து கவிதை எழுதிய தமிழ் கவிஞர்கள் இல்லை என்று சொல்லலாம்.

பாரதி தனது கவிதைகள் மூலம், தனது தியானத்தை வெளிப்படுத்தினார். அதனால்தான் அவரது கவிதைகள் மந்திரம் போல் நமது உள்ளங்களை வசீகரித்து விழித்தெழச் செய்கிறது. “இன்றைய இளைஞர்களுக்கு பாரதியை புரிய வைக்கவில்லை என்றால், தமிழகத்திற்கு எதிர்காலமே இல்லாமல் போகும்”.

“ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் நீ பேசப் போகிறாயா என்று கேட்டார்கள். பாரதியைப் பற்றி பேசுவது என்றால் பாகிஸ்தானில் கூட போய் பேசுவேன்” என்று தனது பாரதி பற்று குறித்த நிலைப்பாட்டை விளக்கி உரையை தொடங்கினார். ”

பாரதி என் பாட்டன் என்ற போது எல்லோரும் ஏளனம் செய்தனர். தமிழை சனியன் என்று சொன்னவர் எனக்கு தந்தையாக இருக்க முடியும் என்றால், தமிழை இனிமை என்று சொன்ன பாரதி எனக்கு பாட்டனாக இருப்பதில் என்ன தவறு?” என சீமான் கேட்ட பொழுது அரங்கம் அதிர்ந்தது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதையிலே மீண்டும், மீண்டும் தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பாரதி பாடியுள்ளான்.

அதனால் இந்த மாநிலத்திற்கு ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் வைத்ததாக அண்ணா சொந்தம் கொண்டாட முடியாது. அதை முதலிலேயே செய்தவன் தீர்க்கதரிசியான பாரதி தான்.
“யார் பாரதியை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர்களை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

ஏனென்றால் பாரதி இல்லாத இடத்திலே, தமிழுக்கு மதிப்பில்லை என்று பொருள். இந்த உலகுக்கே ஒருவன் பாரதி, அவனை உலகறிய செய்வது நம் கடமை. அதனை யார் செய்யாவிட்டாலும் நான் செய்வேன்! என்று சபதமிட்டார்.

“காலத்தால் உருவானவன் கவி. காலத்தையே உருவாக்குபவன் மகாகவி!” “இன்று பாரதியை இளைஞர்கள் படிக்காமல் இருக்கிறார்கள் என்றால், அதற்கு கடந்த 60 ஆண்டுகளாக நம்மை ஆண்டவிதம்தான் காரணம். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளைஞர்கள் இறை தத்துவத்தை பார்த்து வாழ்ந்தார்கள்.

இன்றைக்கு அவர்கள் திரை தத்துவத்தை பார்த்து நலிந்து விட்டார்கள். மீண்டும் அந்த இறை தத்துவம் இளைஞர்களிடத்திலே சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்வின் நோக்கம் என்று இந்நிகழ்ச்சியை ராம்குமார் நிறைவு செய்தார்.