ஹிந்து சமுதாயத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சம்பவம் 1969ல் நடந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கர்நாடக மாநில மாநாடு அந்த ஆண்டு டிசம்பர் 13, 14ல் உடுப்பியில் நடைபெற்றது. ஹிந்து தர்மத்தில் ‘ தீண்டாமைக்கு சாஸ்திரங்களில் அங்கீகாரம் இல்லை, எனவே தீண்டாமை ஒழிய வேண்டும்’ என்ற உண்மையை எடுத்துரைக்கும் ஈடு இணையற்ற தீர்மானத்தை, பல்வேறு ஹிந்து சம்பிரதாயங்களின் ஆசாரியர்கள் முன்னிலையில் மாநாடு நிறைவேற்றியது. அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் பின்வருமாறு:
”தர்ம குருமார்களும்’ ஆசார்யர்களும் ஆழ்ந்து பரிசீலித்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள அருளாணைக்கு இசைவான விதத்தில் ஹிந்துக்களுக்கு இந்த மாநாடு விடுக்கும் வேண்டுகோள் : ஹிந்துக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை “தீண்டுதல்”, “தீண்டாமை” எண்ணம் இவற்றை கைவிட்டு விடவேண்டும்; இவைதான் நமது சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வையும் பிளவுகளையும் ஏற்படுத்தின, சாதி சம்பிரதாயம், பிறப்பு ஆகியவற்றைக் கருதாமல், ஹிந்துக்கள் அனைவரும் ஒரே பொதுக் குடும்பத்தவர் என்ற அடிப்படையில ஹிந்துக்கள் தங்கள் சமய நடவடிக்கைகளையும் சமூக விவகாரங்களையும் நடத்தி வர வேண்டும்.”
”தளரா ஒருமை உணர்வினால் ஹிந்து சமுதாயம் முழுவதும் ஒன்று கூட்டப்பட வேண்டும் என்ற இந்த நோக்கத்துக்கு இணங்கவும் ‘தீண்டுதல், தீண்டாமை’ மனப்பான்மைகளினால் சமுதாயம் சீர் குலைந்து சிதறாமலிருக்கவும் உலகெங்கும் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பழகும் போது ஒருமைப்பாட்டு உணர்வையும் சமத்துவ உணர்வையும் கட்டிக் காத்து வர வேண்டும்.
ஜகத்குருமார்களும், ஆசார்யர்களும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய அலுவலகத்
திற்கு, தீண்டாமை ஒழிப்புத் தீர்மானத்திற்குத் தங்கள் ஒப்புதலைக் கடிதம் மூலம் தெரிவித்
திருந்தார்கள்: (மாநாட்டுக்கு முன் தினம் வரை )
ஜகத்குரு சிருங்கேரி சங்கராசார்யர், ஜகத்குரு துவாரகா சங்கராசார்யர், ஜகத்குரு பத்ரி சங்கராசார்யர், ஜகத்குரு பெஜாவர் மத்வாசார்யர், ஜகத்குரு அத்மார் மடம் மத்வாசார்யார், ஜகத்குரு சித்திர துர்கா முருக ராஜேந்திர சுவாமிகள், ஜகத்குரு ஹூப்ளி மூருசவீர மடம் ஸ்வாமிகள், அஸ்ஸாம் அனியாதி சத்ரம் சத்ராதிகார், டெல்லி முனி சுசீல் குமார், பம்பாய் சுவாமி சின்மயானந்தர் போன்ற பல குருமார்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் முதல் தீர்மானமாக தீண்டாமை ஒழிப்புத் தீர்மானத்தை விவாதிக்க தலைமை வகித்தவர் ஆர். பரணய்யா. அவர் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை மடாதிபதி ஒருவர் முன்னதாக எடுத்துச் சொல்லிப் பாராட்டியிருந்தார். பரணய்யா தமது பள்ளி, கல்லூரி நாட்களில் கல்லூரியில் தலைமை வகித்தவர். எல்லாத் தேர்வுகளிலும் முதல் வகுப்பில் தேறியவர். மைசூர் பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துக் கொண்ட முதல் பட்டியல சமூக மாணவர் இவர். எம். சி. எஸ். தேறியபின் தலை சிறந்த நிர்வாகஸ்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மைசூர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராக இருந்தவர். சாஸ்திரங்களில் புலமையும், தர்மத்தில் ஆழ்ந்தப் பற்றும் கொண்ட இவரே இந்தக் கூடுதலுக்குத் தலைமை வகிக்க முற்றிலும் பொருத்தமானவர். உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்த அவரது இந்த சொற்கள், பல நூற்றாண்டுகளாக அவரது சகோதரர்கள் சொந்த மதத்தார் கையிலேயே பட்ட துன்பத்தையும், அவமானத்தையும் பிரதிபலித்தன; சபையோரின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பின.
அடுத்து, அந்த இரண்டு நாள் மாநாட்டின் சிகரமான நிகழ்ச்சி: ஹிந்துக்களின் வரலாற்றில் மகத்தானதோர் கட்டம்; பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் சமுதாயத்தின் களங்கம் துடைக்கப்பட்ட கணம்; பல்வேறு ஜகத்குருமார்
களும், மடாதிபதிகளும் ஹிந்து சமுதாயம் முழுவதற்கும் அறை கூவல் விடுத்து தீண்டாமையை ஒழிக்குமாறு அருளாணை பிறப்பித்தன. இது நாள் வரை எத்தனையோ அரசியல் தலைவர்களும், சமுதாய சீர்திருத்தவாதிகளும் இந்தத் தீமையை ஒழிக்கப் பாடுபட்டிருக்கிறார்கள்’ நமது அரசியல் சாஸனம் கூட தீண்டாமையை சட்ட விரோதமாக்கியிருக்கிறது. ஆனாலும் கறை நீங்கின பாடில்லை. ஏனென்றால் தீண்டாமை என்பது ஹிந்து தர்மத்தின் ஒரு அம்சம் போலிருக்கிறது என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்து கொண்டிருந்தது. இப்போது தர்ம குருமார்களே முன் வந்து, தர்மத்தின் தீண்டாமையை சட்ட விரோதமாக்கி, பகிரங்கமாக தெள்ளத் தெளிவாக அறிவிப்பு செய்கிறார்கள்! இவ்வாறு அந்த விஷப்பூண்டு வேரறுக்கப்பட்டு விட்டது.
முதலில் கர்நாடக பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் என். என் ஷண்பாக், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வழிகாட்டிக் குழுவில் அங்கம் வகிக்கும் ஜகத்குருமார், மடாதிபதிகள் அனுப்பிய அருளாணையைப் படித்தார். பிறகு அவைத் தலைவர் அவர்களை ‘மத,சமூக நடவடிக்கைகளில் சமத்துவம் கோரும் அறை கூவல்’ என்ற அந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தார்.
தலைவர், தீர்மானத்தைப் படித்து முடித்தவுடன் முன்னெப்போதும் கண்டிராத உற்சாகத்தோடு அந்த பிரம்மாண்டமான சபையே (15.000 பிரதிநிதிகள்) மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கரவொலி எழுப்பி தீர்மானத்தை வரவேற்றார்கள். மேடையில் வீற்றிருந்த மதத் தலைவர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்திற்கு ஆசி வழங்கினர்.
தீயதொரு பழக்கத்தை தர்மம் வெற்றி கொண்ட தருணம் அது! ஒட்டுண்ணியாக இருந்து உயிர் சத்தை உறிஞ்சுக் கொண்டிருந்த பழக்கத்தை ஓங்கிப் படர்ந்த இந்த மரம் உதிர்த்து விட்ட தருணம்! சாகா வரம் பெற்று ஊக்கத்துடன் வாழும் சமுதாயம் ஹிந்து சமுதாயம் என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டிய பொன்னான தருணம் அது.
வரலாற்றில் ஒரு திருப்பம் ஏற்படுத்திய சாதனை புரிந்து விட்டதாக, அந்த மாநாட்டிற்கு வந்த ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். அவையோரின் இந்த மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டின. மாநாட்டின் செயலாளர் சூரியநாராயண்ராவ் அவர்களின் சொற்கள்: “இந்தப் பொன்னானத் தருணத்தைக் கூட்டுவித்ததற்காக நமது தர்ம குருமார்களுக்கு நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம். எந்த விலை கொடுத்தும் சமுதாய ஒருமையைக் கட்டிக் காப்பதில் நமக்குள்ள உறுதியை வெளிப்படுத்துவோம்” என சொல்லி முடித்ததும் ஜெய ஜெய ஜகத்குரு”, “ஹிந்து ஒற்றுமை ஓங்குக” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. கர்நாடகத்தின் பட்டி, தொட்டி தோறும் ஏன்? ஹிந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைந்து, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எதிரொலித்து ‘ஹிந்து ஒருமைப்பாடு என்னும் நெடுநாளைய கனவை நனவாக்கும் வரை இந்த முழக்கம் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும்’.
மாநாட்டின் நிறைவு விழா முடிந்து வாயிலில் பரணய்யா நின்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு குருஜி வந்தார். அப்படியே குருஜியை ஆரத் தழுவிக் கொள்கிறார் பரணய்யா. அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! குரல் தழுதழுக்க, குருஜியிடம் அவர் கூறுகிறார்: “ஐயா ரொம்ப புண்ணியம் உங்களுக்கு! எங்களுக்காக நீங்கள் இந்தப் பணியை எடுத்துக் கொண்டு இருக்கிறீர்களே!” மென்மையான குரலில் குருஜி குறிப்பிடுகிறார்: ”நான் மட்டுமா? சமுதாயம் முழுவதுமே அல்லவா இந்தப் பணியை மேற் கொண்டு விட்டது!”
எத்தனையோ நூற்றாண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதிகள், சிறுமைகள் ஆகியவற்றின் கறையை நீக்கிய அச்செயல் தந்த ஆனந்த பரவசமே பரணய்யாவின் கண்ணீராக வெளிப்பட்டதோ?
– – — 1983 விஜயபாரதம்
பொங்கல் மலர்