எழுச்சியுறுகிறது பாரதம் வீழ்ச்சியடைகிறது சீனா

 

பாரதத்தை யானையும், சீனாவை டிராகனும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. யானை எழுச்சிப் பாதையில் வீறு நடை போடுகிறது. ஆனால், டிராகன் தடுமாறி சறுக்கிக் கொண்டே வருகிறது.

சர்வதேச அளவிலான பொருளாதாரப் புள்ளி விவரங்கள் சீனா எந்த அளவிற்கு மந்த கதியை அடைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கின்றன. பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சைனா அண்மையில் அறிவித்துள்ள கரன்சி சார்ந்த கொள்கை, பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற தன்மை சீனாவில் உக்கிரமடைந்து வருகிறது என்பதைத் துல்லியமாக உணர்த்துகிறது. கடந்த மே மாதம் சீனாவில் உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக இருந்தது. இது ஜூன் மாதம் 4.8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. வரும் மாதங்களில் இது மேலும் சரிய வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இது பங்கு சந்தையிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவிலுள்ள பிரதான பங்கு சந்தைகளில் புள்ளி குறியீடுகள் சட சடவென சரிந்து வருகின்றன. சீனாவின் உற்பத்தி மட்டும் குறையவில்லை, சீன மக்களின் நுகர்வும் குறைந்து கொண்டே வருகிறது. இதிலிருந்து சீனா மீள்வது எளிதல்ல என்று கருதப்படுகிறது.

பாரதப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் துரிதமாகப் பயணித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் பாரதத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. சர்வதேச வங்கி, சர்வதேச நிதியம் போன்றவை பாரதத்தின் வளர்ச்சி முறையே 6.3 சதவீதமாகவும், 6.2 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளன. சீனாவுடன் ஒப்பிடும்போது, பாரதப் பொருளாதாரம் நிலையானதாக, ஏறுமுகமானதாக உள்ளது.

பாரதப் பொருளாதாரம் வளர்பிறை
யாகவும், சீனப் பொருளாதாரம் தேய்பிறை
யாகவும் உள்ளது. இந்நிலையில், 2028ல் பாரத உள்நாட்டு உற்பத்தியை 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இது நனவாகி வருகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மக்கள் தொகை அடிப்படையில் சீனாவைப் பாரதம் மிஞ்சி விட்டது. இதை மேலோட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. பாரதத்தில் யுவசக்தி ஏறுமுகமாக உள்ளது. சீனா முதியவர்களின் தேசமாக மாறி வருகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், பாரதம் பொருளாதாரத்தின் சகல அம்சங்களிலும் சீனாவை முந்தி விடும் என்று ஆய்வாளர்கள் கூறுவது முற்றிலும் ஏற்புடையதே.

2030ல் பொருட்கள் ஏற்றுமதியை 1 டிரில்லியன் டாலர் அளவிற்கும், சேவை ஏற்றுமதியை 1 டிரில்லியன் டாலர் அளவிற்கும் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரதம் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பொருளாதார ரீதியாக தொய்வின்றி தொடர்ந்து இயங்கி வருகிறது.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து

தமிழில் நிகரியவாதி