தமிழகம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆதரவாக இருப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கடந்த வருடத்தை விட இந்த வருடம் 1,368 கிளைகள் புதிதாக ஏற்பட்டுள்ளது. இப்போது மொத்தம் 4,௦௦௦ ஆர்.எஸ்.எஸ். கிளைகள் உள்ளன. 1939ல் தமிழ்நாட்டில் ஆரம்பித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
மற்ற இயக்கங்கள் போல் இல்லாமல்
ஆர்.எஸ்.எஸ். தினசரி சந்திக்க கூடிய சிறப்பு வாய்ந்த இயக்கம். 1925ல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டை முன்னிட்டு இந்த வருடம் 2025 விஜயதசமி தொடங்கி 2026 விஜயதசமி வரை ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்திட 6 நிகழ்ச்சிகள் திட்டமிடப் பட்டுள்ளது.
- 2025 விஜயதசமி அன்று 1 லட்சம் பேர் அடங்கிய பகுதியில் அல்லது ஒரு ஒன்றியத்தில் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு ஊர்வலம் அல்லது பொது நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
- இந்த வருடம் நவம்பர் தொடங்கி வரும் 2026 ஜனவரி வரையுள்ள காலகட்டத்தில் ஏதாவது ஒரு 21 நாட்கள் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் 10,000 முதல் 15,000 மக்கள் வசிக்கும் இடத்தை ஒரு பகுதியாகப் பிரித்து அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு செய்தியைச் சொல்ல இருக்கிறார்கள். தமிழகத்தில் மேற்படி கூறிய 21 நாட்கள் ஆர்.எஸ்.எஸ். பிரசாரம் குறித்து முடிவெடுத்து விரைவில் அறிவிப்பார்கள். 10,000 – 15,000 மக்கள் வசிக்கும் பகுதிகளை பஸ்தி, மண்டல் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்கனவே பிரித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பஸ்தி மண்டல் பகுதியில் ஹிந்து ஒற்றுமை மாநாட்டை, நாடு முழுவதும் இந்த முறை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மாநகர் அளவில் சமுதாயத்தில் இருக்கின்ற பெரியோர்கள், ஜாதி சங்கங்கள், துறவிகள், ஞானிகள், மகான்கள் ஆகியோர்களைச் சந்தித்து இவர்களை ஒன்றிணைத்து சமுதாய ஒத்திசைவு நிகழ்ச்சியினை (சமாஜிக் சத்பாவ் நிகழ்ச்சி) அனைத்து மாநகரம் மற்றும் நகரங்களில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கருத்துருவாக்கவாதிகள், முக்கியஸ்தர்கள், அந்த பகுதியில் பிரபலமானவர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் உள்ள அந்தந்த மாவட்டங்களில் ஒரு நிகழ்ச்சியினை நடத்த வேண்டும்.
- மாநில அளவில் 20 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்காக கல்லூரி மாணவர்கள், பணிபுரிபவர்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தின் மத்தியில் தேச பக்தியையும், நற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காகவும் ஆர்.எஸ்.எஸ் செய்யும் சேவைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் சங்கம நிகழ்ச்சி ஒன்றினை நடத்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மேற்படி 6 நிகழ்ச்சிகளை நடத்தி, ஹிந்து சமுதாயத்தை ஒன்றிணைத்திட வேண்டும் என்று நூற்றாண்டு செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களைச் சந்திக்கும் இந்த நிகழ்ச்சிகளில் என்ன சொல்ல வேண்டும் என்று 2024 விஜயதசமி முதல் 2025 விஜயதசமி வரை “பஞ்ச பரிவர்த்தன் – (5 அமுதம்)” என்ற ஒரு செயல் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
இந்த திட்டத்தைக் கடைபிடித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் அனைவரும் இந்த வருடம் முதல் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திட இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறார்கள்.
சமுதாய நல்லிணக்கம் : உதாரணமாக ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ ஓட்டுநரிடம் நலம் விசாரித்தல், நாம் போடும் குப்பைகளைச் சுத்தம் செய்ய வரும் துப்புரவு தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்து குடிக்க தண்ணீர் கொடுக்கலாம். இப்படி அன்றாட வாழ்வில் சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்தலாம்.
குடும்பநல மேம்பாட்டுத் திட்டம் : வாரம் ஒரு முறை வீட்டில் சமைத்த உணவை அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது நம்முடைய முன்னோர்கள், குலதெய்வ வழிபாடு, குடும்பப் பாரம்பரியம் மற்றும் பெருமை ஆகியவைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். இந்த நேரத்தில் டிவி பார்ப்பது, செல்போன் பார்ப்பது, அரசியல் விவாதம் செய்வது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். கண்டிப்பாக வாரம் ஒரு நாள் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
சுற்றுச்சசூழல் பாதுகாப்பு : நம்மால் முடிந்த வரையில் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாடற்ற சூழலை உருவாக்க வேண்டும். மரங்கள் நட வேண்டும் குறிப்பாக பறவைகள், விலங்குகள் பயன்பெறும் வகையில் பழமரம் நட வேண்டும் மழை பெய்வதற்கு உகந்த மரங்களைத் தேர்வு செய்ய வேண்டும். உணவு, தண்ணீர் தேவையான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும் வீணடிக்கக் கூடாது.
தன்னை அறிதல் (ஸ்வ) : குடும்பத்தில் தாய்மொழியில் பேச வேண்டும். நம்முடைய பாரம்பரிய உடைகளை நாம் அணிய வேண்டும். சுதேசி பொருட்களைப் பயன்படுத்துவதை நாம் பெருமையாக நினைப்பதோடு மட்டுமல்லாமல் நாம் சுதேசி பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
குடிமக்கள் கடமை : சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது இருவரும் தலை கவசம் அணிய வேண்டும். போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டக் கூடாது. தேர்தலின்போது கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும்.
தகவல் : ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலங்களின்
மக்கள் தொடர்பு செயலாளர்
செய்தியாளர் சந்திப்பிலிருந்து …
தொகுப்பு : மோ.சிவ. எல்லப்பன்