தெரியாமல் தான் கேட்கிறேன் ஹிந்தியைத் திணிக்கிறார்
களாமே, அப்படியா?
திணிக்கிறார்கள் என்பது தவறு. திணித்தார்கள். திணித்
தவர்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். இந்திரா காலத்திலும் சரி ராஜீவ் காந்தி காலத்திலும் சரி. ஹிந்தியை திணித்தார்கள்.
சரி, இன்று என்ன நிலைமை?
காங்கிரஸ் தர்பாரில் முதல் மொழி தமிழ், இரண்டாவது மொழி ஆங்கிலம், மூன்றாவது மொழி கட்டாய ஹிந்தி என்று இருந்தது. மத்தியில் பாஜக ஆட்சி 2019ல் மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் இல்லை என்று சொல்லி தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது.
மற்ற மாநிலங்களில் எல்லாம் மும்மொழி கொள்கை இருப்பதால் அந்த மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்க முடிகிறது. இங்கே ஹிந்தி கட்டாயம் இல்லை என்று ஆகிவிட்டதால் தமிழக மாணவர்கள் ஒரு மொழி கற்கும் வாய்ப்பை இழந்துவிட மாட்டார்களா?
அந்த வகையில் தமிழக மாணவர்கள் வாய்ப்புகளை இழந்து விடாமல் இருப்பதற்காக பாஜக அரசின் தேசிய கல்வி கொள்கை மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்றுக்
கொள்ள பரிந்துரைக்கிறது.
ஆனால் தமிழகத்தில் மும்மொழி திட்டம் வர முடியுமா?
‘வரமுடியுமா’ என்ன, ஏற்கெனவே தமிழக மாணவர்கள் மூன்று மொழி படிக்கிறார்களே? பாருங்கள்: தமிழகத்தில் தனியார் பள்ளி
களில் படிக்கும் மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட அதிகம். அரசுப் பள்ளிகளில் 52 லட்சம். தனியார் பள்ளிகளில் 56 லட்சம். பல தனியார் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின்படி இரண்டு மொழி கற்பித்தாலும், சி.பி.எஸ்.இ போன்ற அகில பாரத கல்வி திட்டப்படி மூன்று மொழிகள் பயிலும் மாணவர்கள் 30 லட்சம் பேர்!
தமிழகத்திலா?
ஆம், தமிழகத்தில்தான்.
ஹிந்தியை எதிர்க்கும் கூட்டம் இதை அனுமதிக்கிறதா?
அனுமதிப்பது என்ன, வசதியான திமுக ஆட்களின் பிள்ளைகள் எல்லோருமே தனியார் பள்ளிகளில் மூன்று மொழி படிக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி இவர்கள் தடுப்பார்கள்!
அப்படியானால் அரசுப் பள்ளி
களில் படிக்கும் அந்த 52 லட்சம் தமிழ் மாணவர்களின் கதி?
அதோ கதிதான். தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்படும் பிரிவினைவாத இருமொழிக் கொள்கையால் அரசுப் பள்ளி மாணவர்கள் நாளை அடித்தட்டு நிலைக்குத்தள்ளப் பட்டு உழல வேண்டியதுதான். வாய்ப்பும் வசதியும் திமுக பெரும் புள்ளிகளின் வாரிசுகளுக்கு மட்டுமே. அதாவது மாணவ சமுதாயத்தை திமுகவின் மொழிக் குளறுபடி ஏழை பணக்காரன் என்று இரண்டாக கூறு போட்டுவிட்டது. இது அக்கிரமம். அரசுப் பள்ளி மாணவர்களான அந்த 52 லட்சம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படும் சமூக அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
ஆனால் 2004 முதல் 2014 வரை திமுக மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்ததே, அப்போது மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்பதை மாற்றியிருக்கலாமே?
எப்படி மாற்றுவார்கள்? மும்மொழிக் கல்வி அளிக்கும் தனியார் பள்ளிகளை நடத்துபவர்களே திமுக பெரும் புள்ளிகள் தானே! மாநில முதல்வர்களாய் இருந்த சி. என். அண்ணாதுரையோ மு. கருணாநிதியோ இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினோ செய்யத் தவறியதை 2019ல் மோடி தான் செய்தார்! ஆம் ஹிந்தி கட்டாயம் என்பதை ஒழித்தார்.
“ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடுவோம்” என்ற குரல் இன்றும் கேட்கிறதே?
மொழிப் பிரிவினைவாதத்தை முறியடிக்க தேசியம் தலைதூக்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு உண்மை புரியத் தொடங்கி விட்டதால் திமுக வகையறாக்களுக்கு உதறல், அதனால் கதறல்!
தமிழக பாஜக தலைவர் பேசியதிலிருந்து
தொகுப்பு : பெரியசாமி
ஏன்? ஏன்? ஏன்?
“மூன்றாவதாக ஏதாவது ஒரு இந்திய மொழி” என்ற தேசிய கல்விக் கொள்கையை ஹிந்தி மொழிதான் என மக்களிடம் திரித்து பரப்புவது ஏன்?
இரு மொழிக் கொள்கை 1963ல் திணிக்கப்பட்டது தானே, அதனை மக்கள் கருத்தறிந்துதான் செயல்படுத்தினீர்களா?
திராவிடம் பேசும் அரசியல்வாதிகள் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்
களுக்கு அவர்களின் தாய்மொழியை கற்றுக்கொடுக்க மறுப்பது ஏன்?
ஆம்பூர் , வாணியம்பாடி போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசு சார்பில் 32 இடங்களில் உருதுவை தாய்மொழி
யாக கொண்டு தமிழை கற்றுக்கொள்ளாமலேயே பொதுத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நிலையில் மற்றவர்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பி.எம்ஸ்ரீ பள்ளி, நவோதய பள்ளி, போன்ற குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வி வழங்கும் முறையை இங்கு வரவிடாமல் தடுத்து பட்டியல் சமூக, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சிதைப்பது ஏன்?
மொழிச் சிறுபான்மையினர் முழக்கம்
சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் சில தனியார் பள்ளிகளிலும், மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், ஏழை, நடுத்தர குடும்பங்
களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில், பெற்றோர் விரும்பினாலும், மூன்றாவது மொழி கற்க அனுமதிக்கப்படுவதில்லை.
தேசிய கல்விக் கொள்கையில், எந்த இடத்திலும் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் கட்டாயம் எனக் கூறப்படவில்லை. இரண்டு இந்திய மொழிகள் உட்பட, மூன்று மொழிகள் இருக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தமிழ்மொழி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என தமிழக தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள மொழிவழி சிறுபான்மையினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
மொழிவழி சிறுபான்மையினரான நாங்கள், தமிழ் மொழி, கலாச்சாரத்தை மதிக்கிறோம். நாங்கள் ஒருபோதும் தமிழ் கற்பதற்கு எதிராக இருந்ததில்லை. எங்கள் தாய்மொழியை பள்ளி பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என்பதே, எங்களின் கோரிக்கை.
தினமலரில் சி.எம்.கே.ரெட்டி. (தமிழக மொழி சிறுபான்மையினர் பேரவை தலைவர்)
ஏழைப் பிள்ளைகளை ஏய்க்காதே: துக்ளக் சத்யா
தேசிய கல்விக் கொள்கையால் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழ் குடும்பக் குழந்தைகள் மூன்றாவது மொழியாக தமிழைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். இது தமிழ் பரவுவதற்கு உதவத்தானே செய்கிறது? மும்மொழி திட்டம் எதிர்க்கப்பட்டால், அங்குள்ள நம் குழந்தைகள் தமிழ் கற்கும் வாய்ப்பு பறிபோய் விடாதா?
‘பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதாக ஒப்புக்
கொண்டு சென்ற ஆண்டு அதற்கான நிதியும் பெறப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் திட்டத்தை அமல்படுத்தவில்லை. பிறகு எப்படி நிதி தருவது?’ என்கிறது மத்திய அரசு. மற்ற மாநில அரசுகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நிதியும் பெற்றுள்ளன. தமிழக அரசோ ‘திட்டம் வேண்டாம். நிதி மட்டும் கொடுங்கள்’ என்கிறது. திட்டத்துக்குத் தானே நிதி? திட்டத்தை அமல்படுத்தாமல் நிதி எப்படி தருவது என்பது மத்திய அரசின் வாதம். இதில் ப்ளாக்மெயில், தடித்தனம், திமிர்த்தனம் என்ற வசவுகளுக்கு என்ன அவசியம்?
ஹிந்தி எதிர்ப்பு என்பதே இன்று காலத்துக்குப் பொருந்தாத கொள்கை. அதனால் ஹிந்தி கற்க விரும்புபவர்கள் கற்கட்டும். விரும்பாதவர்கள் வேறு ஏதாவது ஒரு மொழியைக் கற்கட்டும். இலவசமாக ஏழைக் குழந்தைகளுக்கு தரப்படும் இந்த மூன்றாவது மொழியறிவை ஏன் தடுக்க வேண்டும்? இந்த நிதி வந்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியும் என்ற வாதம் சரியானதா என்றும் தெரியவில்லை. இத்திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை அவர்களுக்கு எந்த நிதியிலிருந்து சம்பளம் தரப்பட்டது?
ஹிந்தியை அனுமதித்தால் அது தமிழையும் ஆங்கிலத்தையும் விரட்டி விடும் என்றால், தமிழ், ஆங்கிலத்தை விட ஹிந்தி வலிமையான மொழி என்றாகி விடாதா?
தேவையற்ற மோதலைத் தவிர்த்து, கொடுக்கிற நிதியைப் பெற்றுக் கொண்டு திட்டத்தை அமல்படுத்துவதே சாதுர்யமான அணுகுமுறை. — துக்ளக் நிருபர் சத்யா முகநூலிலிருந்து