தமிழகத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் போதெல்லாம் ஜனநாயகம் புதைக்கப்பட்டு பணநாயகமே வெற்றி பெறுகிறது. படிப்படிப்பறிவில்லாத அறியாமையில் இருக்கும் பாமர மக்களை விலைபேசி அவர்களின் வாக்குகளை வாங்கும் அவலம்தான் அரங்கேறுகிறது.
ஆளும் கட்சிகள் தான் செய்த சாதனைகளையும் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களையும் தனது ஆட்சியில் மக்களின் வாழ்க்கை தரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியையும் கூறி வாக்கு சேகரிக்காமல் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் சாராயத்தையும் கொடுத்து பாலின் மீது சத்தியம் வாங்கியும், குலத்தெய்வ கோயில்களில் கறி விருந்து வைத்தும் வாக்குகளை பெறுவது ஜனநாயகத்தின் சாபக்கேடு.
கடந்த 2009ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இடைத்தேர்தல் வந்தபோது அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தனது மூத்த மகன் மு.க.அழகிரியை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார்.
அவர் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை தயார் செய்து பூத்துக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து பணம், பரிசுப் பொருட்கள், பெண்களுக்கு புடவை, கிரைண்டர் போன்ற பொருட்களை வாரி இரைத்தார். வெளியூரில் தங்கி வேலை செய்தவர்களுக்கு வந்து போக வாகன வசதி, செலவிற்கு பணம், சாப்பிட பிரியாணி போன்றவற்றையெல்லாம் கொடுத்து ஆளும் கட்சியின் வேட்பாளர் எளிமையாக வெற்றி பெற செய்தார். அரசியல் கட்சிகள் ஆட்சியையும், அதிகாரத்தையும் அடைவதை நோக்கமாக கொண்டு நல்ல கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுத்து அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளை சட்டசபையில் பேசி அவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும். வறுமையை அகற்ற வழிகோல வேண்டும். வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தேவைகளை பூர்த்தி செய்யாமல் ஊழல் செய்து சொத்து சேர்த்து வருகின்றனர்.
தேர்தல் வருகின்ற போது தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை வாரி இரைத்து வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள்.
சமீபத்தில் கூட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கொட்டகை அமைத்து வாக்காளர்கள் தங்க வைக்கப்படுவதாகவும் அதனால் மற்ற வேட்பாளர்கள் அவர்களை அணுக முடியாத சூழலை ஏற்படுத்தினார்கள் என வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் அரசு ஊழியர்களாக இருப்பதால் இடைத்தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகளை சரியாக அமல்படுத்த முடிவதில்லை. பணப்பட்டுவாடாவை தடுக்க முடிவதில்லை. அரசியல் கட்சிகள் மாறப் போவதில்லை. ஆனால் மக்கள் மாற வேண்டும். அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் மக்களுக்கு தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.