நீதிகேட்டுப் போராடும் தாயார் பூர்ணிமா ராவ்

 

சுசிர் பாலாஜியின் தாயார் பூர்ணிமா ராவ் இன்னும் சோகத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறார். 26 வயதான தனது மகன் சுசிர் பாலாஜியை இழந்து விட்ட துக்கம் ஒருபுறம் இருந்தாலும், மகனின் மறைவுக்குப் பின்னால் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும். உண்மையும், நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் அவர் முனைப்புடன் உள்ளார்.

பூர்ணிமா ராவ் கண்ணீர் மல்க கூறியதாவது: எனது மகன் சுசிர் பாலாஜி எனக்கு ஒரே குழந்தை. 26 வயதானாலும் அவனை குழந்தையாகவே பாவித்து வந்தேன். சுசிர் பாலாஜி நமது பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். பகவத்கீதையை படிப்பதிலும் அதை உள்வாங்கிக் கொள்வதிலும் அவருக்கு மிகுந்த நாட்டம் உண்டு. ஆன்மிகமும், தத்துவமும் அவரை இயக்கி வந்தன.

எதையும் ஆக்கப்பூர்வ கண்ணோட்டத்திலேயே எடுத்துக் கொள்வது சுசிர் பாலாஜியின் இயல்பு. எதற்கும் அவர் மனம் கலங்கியதில்லை. நவம்பர் மாதம் 22ம் தேதி என்னிடம் சுசிர் பாலாஜி சுமார் 10 நிமிடங்கள் பேசினார். அப்போதுதான் அவர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட்டுக்கு திரும்பியிருந்தார். கட்டலினா தீவில் 26வது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி விட்டு திரும்பி இருந்ததால் வார்த்தையில் உற்சாகம் கரைபுரண்டோடியது.

நான் எந்த தவறையும் செய்யவில்லை. நான் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவன். சத்தியத்தின் பாதையிலிருந்து பிறழ மாட்டேன். யார் தவறு செய்தாலும் கண்டும் காணாமல் போகும் இயல்பு எனக்கு இல்லை. ஓபன் ஏஐ நிறுவனம் காப்புரிமை மீறலில் வரைமுறையின்றி முறைகேடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த முடிவுக்கு நான் வர வலுவான ஆதாரங்கள் உள்ளன. நியூயார்க் டைம்ஸ் பேட்டியில் இதை நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

எனக்கு எதிராக யாரேனும் செயல் படுவார்களா? செயல்பட மாட்டார்களா? என்ற கேள்விக்குள் நுழைய நான் விரும்பவில்லை. என்று என் மகன் உறுதிபட உரைத்தார்.

நவம்பர் 26ம் தேதி சுசிர் பாலாஜியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து நான் அடுத்த நாள் அங்கு சென்றேன். ஆனால் என்னை அந்த அறைக்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவ பரிசோதனை, புலன்விசாரணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடித்து வைக்கப்பட்டு விட்டன. எனது மகனின் மறைவில் மர்மம் உள்ளது. இந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. சட்டரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்போம். ஏற்கெனவே இதன் பொருட்டு 50 ஆயிரம் டாலர் செலவு செய்துள்ளோம். இதைப்போன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் நிகழ இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை நான் முன்னெடுத்துள்ளேன்.

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பலர் திடீர் திடீரென உயிரிழந்து விடுகின்றனர். இது சாதாரண செய்தியாக கடந்து போய் விடுகிறது. ஆனால் ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் ஆழ்ந்த வலியும், சோகமும் உள்ளது என்பதை எனது மகனின் மரணம் உணர்த்தி விட்டது. இத்தகைய நிலை எதிர்காலத்தில் யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே நான் திடமாக போராடி வருகிறேன்.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி