பாரதத்திலும் லண்டனிலும் டாக்டர் அம்பேத்கர் நினைவைப் போற்றும் ஐந்து இடங்கள் `பஞ்ச தீர்த்தங்கள்’ ஆக வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. மகூ நகரில் உள்ள அவரது பிறப்பிடம்; லண்டனில் அவர் தங்கி படித்த இடம்: நாகபுரியில் அவர் புத்த மதம் தழுவிய தீக்ஷா பூமி; டெல்லியில் அலிப்பூர் சாலையில் கடைசி காலத்தில் அவர் வாழ்த்திருந்த இல்லம்: மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள அவரது இறுதி சடங்கு நடைபெற்ற இடம். அந்த ஐந்து, பஞ்ச தீர்த்தங்களின் காட்சியை இங்கு படங்களாக பார்க்கலாம். விரைவில் நேரில் சென்றும் தரிசிக்கலாம்.
மகூ நகரில் அவர் பிறந்த இடம்: ம.பி. மாநிலம் இந்தூர் மாவட்டம், மகூ நகரில்தான் பாரதத்தின் அரசியல் சாஸனம் உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் 1891ல் பிறந்தார். 2003ல் ம.பி. அரசு அந்த நகரின் பெயரை ‘டாக்டர் அம்பேத்கர் நகர்” என்று மாற்றியது.
தீக்ஷா பூமி: டாக்டர் 1956 அக்டோபர் 14 அன்று புத்த மதம் தழுவிய இடம்தான் நாகபுரியில் உள்ள தீக்ஷா பூமி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலத்தை உலகத் தரம் உள்ள நினைவாலயமாக செம்மைப்படுத்தப் போவதாக மகாராஷ்ட்ர முதல்வர் தேவந்திர பட்நவீஸ் அறிவித்தார். இங்கு 120 அடி உயரம் உள்ள ஒரு பெளத்த ஸ்தூபி உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.
இந்து மில் நினைவிடம்: டாக்டர் அம்பேத்கரின் இறுதி சடங்கு நடைபெற்ற இடம் இது. மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள இந்து மில் வளாகத்தில் இந்த நினைவிடம் அமைக்கப்படும். மத்திய ஜவுளி அமைச்சகத்திடம் உள்ள இந்த இடம் பிரதமர் நரேந்திர மோடி கூறி, நினைவிடம் அமைப்பதற்காக மகாராஷ்டிர அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
லண்டன் இல்லம்: லண்டனில் கிங் ஹென்றி ரோடு, 10ம் எண் இல்லத்தில் டாக்டர் அம்பேத்கர் 1921−-22 காலகட்டத்தில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்லூரியில் படிப்பதற்காக தங்கியிருந்தார். மகாராஷ்ட்ராவின் பட்நவீஸ் அரசு இந்த இடத்தை 31 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்த இல்லத்தை திறந்து வைத்தார்.
டாக்டர் அம்பேத்கர் பரிநிர்வாண ஸ்தலம்: டெல்லியில் அலிப்பூர் சாலையில் 26ம் எண் இல்லத்தில் அம்பேத்கர் இறுதி நாட்களை செலவிட்டார். 2016 மார்ச் 21 அன்று, பிரதமர் மோடி இங்கு டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவாலயத்தின் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2018 ஏப்ரல் 14 அன்று, பிரதமர் மோடி தலைநகரில் தனித்துவம் மிக்க மாளிகையாக உருவாக உள்ள இந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.