அரசியல் சாசனத்தில் சோஷலிஸ்ட் செக்யூலர் சேர்க்கப்பட்டது நெருக்கடி கால அட்டூழியமே

அரசியல் சாசன முகப்பு பகுதியில் சோஷலிஸ்ட், செக்யூலரிஸ்ட் ஆகிய வார்த்தைகளை சேர்த்தது செல்லும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இரண்டு வார்த்தைகளும் எப்போது சேர்க்கப்பட்டன, எதற்காக சேர்க்கப்பட்டன என்பது குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம்.

பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு நெருக்கடி ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை தேசத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியாக அவர் திரித்தார். பாரதத்தில் முதன்முறையாக உள்நாட்டு நெருக்கடி நிலை 1975ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. எதிர்கட்சியினர் கைது செய்யப்பட்டு பாரதமே சிறைச்சாலையானது.

செக்யூலரிசமும் சோஷலிஸமும்

இந்த இக்கட்டான இருள் சூழ்ந்த வேளையில்தான் 1976ம் ஆண்டு 42வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில்தான் அரசியல் சாசன முகப்பு பகுதியில் சோஷலிஸ்ட், செக்யூலர் ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன என்பதை மறந்து விடக்கூடாது. இந்த வார்த்தைகளுக்கு பலரும் பல்வேறு விதமாக விளக்கங்களை அளிக்கிறார்கள். இந்த வார்த்தைகள் நம் தொன்மையான கலாச்சாரத்தின் மீது பாரம்பரியத்தின் மீது தாக்குதல் தொடுக்க அர்பன் நக்சல்களால் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

செக்யூலர் என்றால் `மதச்சார்பற்ற’ என்று கூறுகிறார்கள். இதற்கு அரசு, எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்று விரிவுரை வழங்குகிறார்கள். இது வக்கிரமானது. பாரதத்தின் பண்பாட்டுக்கு உகந்த வகையில் இல்லை. நம் பாரத புண்ணிய பூமியில் தர்மமும், ஆன்மீகமும் தழைத்தோங்கி இருந்தன. தர்மமும், ஆன்மீகமும்தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தன.

காங்கிரஸ் கட்சியும் போலி மதசார்பின்மையும்

வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ள செக்யூலரிஷம் என்ற வார்த்தையை இடது சாரிகளும் அர்பன் நக்சல்களும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். பாரத மண்ணில் அடையாளத்தை ஹிந்துக்களின் மரபார்ந்த சின்னங்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தின் அடிப்படையில் தேச விரோத சக்திகள், விஷத்தனமாக இயங்குகின்றன.

மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செக்யூலரிஷம் நம் நாட்டுக்கு ஒவ்வாதது. தர்மமும், ஆன்மீகமும்தான் இந்த மண்ணின் மாட்சியை பிரதிபலிக்கின்றன.

அடுத்தபடியாக சோஷலிஸ்ட் என்ற வார்த்தைக்கு வருவோம். பொருளாதார ரீதியான சமத்துவத்தை இந்த வார்த்தை சுட்டிக் காட்டுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் உற்பத்திக்கான மூலாதாரங்கள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே சோஷலிஸ்ட் வழிமுறையாகும். நம் பாரதத்தில் தற்சார்பு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்கு குந்தகம் விளைவிக்க வேண்டும். பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும். வளர்ச்சியை நிலைகுலைய வைக்க வேண்டும். தேக்க நிலையை உக்கிரப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சோஷலிஸ்ட் என்ற வார்த்தையை திணித்துள்ளார்கள். நெருக்கடி நிலை காலத்தில் மேற்கொள்ப்பட்ட இந்த அட்டூழியம் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

கம்யூனிச சித்தாந்தத்தை கைப்பற்றிய காங்கிரஸ்

பாரதம் எப்போதும் சமூக நீதியை நிலைநாட்டி வந்துள்ளது. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதில் நம் முன்னோர் அக்கறை காட்டி வந்துள்ளனர். இது அற ரீதியான கண்ணோட்டம். ஆனால் மேலைநாட்டு இறக்குமதியான சோஷலிஸம், அழிவு ரீதியான கண்ணோட்டம் சார்ந்தது. நமது அரசியல் சாசனத்தை வகுத்துத் தந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், முகப்புரையில் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். இது முற்றிலும் ஏற்புடையது.

பாரதத்துக்கு ஒவ்வாத புதிய சிந்தனையை திணிக்க முற்படுவது விரும்பத்தகாத விளைவையே உச்சப்படுத்தும். கம்யூனிச சித்தாந்தத்தை மேலைநாட்டிலிருந்து கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அடிப்படையிலான அர்பன் நக்சல்கள் கல்வி, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் மட்டுமல்லாமல், அரசியலிலும் புகுந்து விட்டார்கள். அவர்கள் தங்களது சுய லாபத்துக்காக தந்திரமாக பயன்படுத்தும் வார்த்தைகளே சோஷலிஸமும், செக்யூலரிசமும் ஆகும். நம் நாட்டில் அமைதியான நல்லிணக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. யாரையும் ஒதுக்கி தள்ள வேண்டும் என்ற மரபு நமக்கு ஏற்புடையது அல்ல. அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுவதுதான் நமது பண்பாடு.

அர்பன் நக்சல்கள் ஹிந்துத்துவத்தை ஹிந்துக்களின் திருவிழாக்களை, பழக்க வழக்கங்களை, சின்னங்களையெல்லாம் கேவலப் படுத்துகிறார்கள். பிளவு வாதத்தை தூண்டி விட்டு, நல்லிணக்கம் தேவை. சமயசார்பின்மை அவசியம் என்று கூக்குரல் எழுப்புவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமே. இந்த மண்ணில் காலம் காலமாக நல்லிணக்கம் தலைத்தோங்கியுள்ளது. ஹிந்துத்துவத்தை நிந்தித்து விட்டு சோஷலிஸம், செக்யூலரிசம் என்று கூறி கபட நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். இதை பாரதப் பண்பாட்டில் பற்றுறுதி கொண்ட எவரும் ஏற்கமாட்டார்கள்.

தீர்ப்பு

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டரீதியான தெளிவை ஏற்படுத்தி உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் சோஷலிஸம், செக்யூலரிசம் ஆகிய வார்த்தைகளை நமது மண்ணின் மரபுக்கு உகந்த வகையில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சமத்துவமும், சமய நல்லிணக்கமும் நமக்கு அன்னியமானவை அல்ல. வாழு, வாழவிடு என்பதுதான் நமது கோட்பாடு. இதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்த பாரம்பரியம் கடந்த காலத்தில் வழிகாட்டியது. நிகழ்காலத்தில் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் வழிகாட்டும் என்பது திண்ணம்.

கட்டுரையாளர்: உச்சநீதிமன்ற வழக்கறிஞர்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி